ஜெய்ப்பூர்:  தூய்மை பணியாளராக 2 குழந்தைகளுடன் கடும்பாடுபட்டு படித்து வந்த இளம்பெண் தேர்வு எழுதி,  துணை கலெக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தானின் ஜோத்பூர் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் ஆஷா கந்த்ரா 2 குழந்தைகளுக்கு தாயான இவர், 8 ஆண்டுகளுக்கு முன்பே கணவரிடம் இருந்து பிரிந்து தனது 2 குழந்தைகளையும் காப்பாற்றும் வகையில் துப்புரவு பணியாளர் வேலை செய்து வந்தார், வறுமையிலும் தனது இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்புடன் தனது ஐஏஎஸ்  கனவையும் சுமந்துகொண்டுபணிகளுக்கு இடையே தனது படிப்பையும் தொடர்ந்து வந்தார்.

பல்வேறு குறுக்கீடுகளையும், அவமானங்களையும் சந்தித்து, அதையும் மீறி ஏராளமான தேர்வுகளை எழுதி வந்தவர், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில்  நடைபெற்ற  ராஜஸ்தான் நிர்வாக சேவைத் தேர்வைச ( RAS) எழுதினார்.  இந்த தேர்வு முடிவுகள் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக வெளியிடப்பபடாமல் இருந்து வந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இந்த தேர்வில் ஆஷா கந்த்ரா   நல்ல மதிப்பெண் பெற்றார். இதனால், அவர் துணைகலெக்டர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.  விரைவில் அவருக்கு துணை கலெக்டர் பதவி வழங்கப்பட உள்ளது.

தனது வெற்றி குறித்து பத்திரிகைக்கு பேட்டி அளித்த ஆஷா” சமூகத்தில் எதிர்கொண்ட பாகுபாடு தான் இறுதியில் தனது வாழ்க்கையை மாற்றுவதற்கான உத்வேகமாக அமைந்தது . என்னால் அடைய முடிந்த அனைத்தும் என்னுடைய கடின உழைப்பின் விளைவால் நடந்தது என்று நம்புகிறேன். நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆக விரும்பினேன். ஆனால் வயது தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக ஐஏஎஸ் தேர்வில் கலந்து கொள்ள முடியவில்லை. எனக்கு கிடைத்த இந்த புதிய தகுதி (துணை கலெக்டர்) மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதே என் நோக்கம் என்று கூறினார்.

சமீபத்தில்,  கேரளாவைச் சேர்ந்த அனி சிவா என்ற இளம்பெண் (கணவனால் கைவிடப்பட்டவர்) ஐஸ்கிரிம் விற்பனை செய்து ஜீவனத்தை நடத்தியதுடன், காவல்துறை தேர்வையும் எழுதி வெற்றி பெற்று திருவனந்தபுரம் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக அண்மையில் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.