பார்மர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கி வைத்த திட்டத்தை பிரதமர் மோடி தற்போது மீண்டும் தொடங்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி தொடங்கி வைத்துவிட்டார். சோனியா காந்தியுடன் அப்போதைய பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லத் ஆகியோர் 2013ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி அடிக்கல் நாட்டினர்.

இந்நிலையில் கடந்த வாரம் ஏற்கனவே உள்ள அடிக்கல்லை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிதாக அடிக்கல் நாட்டு விழா நடத்த ஏற்பாடு செய்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், அசோக் கெஹ்லத் இது தொடர்பாக பிரதமருக்கு இரு கடிதம் எழுதியிருந்தார். அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க மோடி வருவதாக வெளியான அறிவிப்பை தொடர்ந்து இந்த கடிதம் எழுதப்பட்டது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்துடன் முதல்வர் வசுந்தரா ராஜே கடந்த ஆண்டு ஏப்ரலில் புதிதாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டார். காலதாமதம் காரணமாக இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு அதிகரித்தது. 2013ம் ஆண்டில் இது ரூ. 37 ஆயிரம் கோடியில் திட்டமிடப்பட்டது.

தற்போது ரூ. 6 ஆயிரம் கோடி அதிகரித்த 43 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் செயல்ப டுத்தப்புடுகிறது. மேலும், ஒப்பந்தப்படி மாநில அரசின் பங்கு 26 சதவீதத்திற்கு மேல் கிடையாது. இந்த திட்டம் நாட்டிலேயே முதன் முறையாக அமைக்கப்படுகிறது என்று பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் 2 லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் சுத்திகரிப்பு திட்டத்தை தொடங்கிவைத்தது தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறிய செயலாகும் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.