ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் அரசு சார்பில் கொரோனாவால் மரணம் அடைந்தோர் இறுதிச் செலவுக்காக ரூ..34.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை பரவலால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ராஜஸ்தான் மாநிலமும் ஒன்றாகும். இன்று ராஜஸ்தானில் 16,089 பேருக்கு பாதிப்பு உறுதி ஆகி 121 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 5,46,964 பேர் பாதிக்கப்பட்டு அதில் 1,55,122 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை ராஜஸ்தானில் 3806 பேர் மரணம் அடைந்துள்ளனர். இறந்தவர்களின் சடலங்களை எடுத்துச் செல்ல தனியார் வாகனங்கள் ஏராளமான பணம் கேட்பதால் அரசு சார்பில் இலவச ஊர்திகள் வசதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் தற்போது கொரோனாவால் மரணமடைந்தோர் சடலங்களை எடுத்துச் செல்வது உறவினர்களுக்கு எளிதாகி உள்ளது.
ராஜஸ்தானில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பது போல் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. எனவே ஆக்சிஜன் பற்றாக்குறை மாநிலம் எங்கிலும் உள்ளது. இதையொட்டி அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரகு சர்மா மற்றும் மூத்த அமைச்சர்கள் கல்லா, சாந்தி தரிவால் ஆகியோர் மத்திய அரசுடன் பேசி ஆக்சிஜன் விநியோகத்துக்கு ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இதன் மூலம் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாகவும் இதற்காக ரூ.3000 கோடி செலவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனாவால் மரணம் அடைவோரின் இறுதிச் சடங்குக்கான செலவுகளை அரசு ஏற்கும் எனவும் அதற்காக ரூ. 34.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த பணத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புக்கள் அனைத்து சடலங்களுக்கும் கவுரவமான முறையில் இறுதிச் சடங்கு நடத்த முன் வந்துள்ளன. இந்த திட்டத்தின் மூலம் இறுதிச் சடங்குக்கான அனைத்து பணிகள் மற்றும் செலவுகளை அரசு ஏற்க உள்ளது.