மும்பை:

ஸ்ரீதேவி உடலுக்கு ஏன் அரசு மரியாதை வழங்கப்பட்டது என்று ராஜ்தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிரா நவ்நிர்மன் சேனா சார்பில் மும்பையில் நடந்த ஒரு பேரணியில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே பேசுகையில், ‘‘மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் தகனத்துக்கு ஏன் அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடந்த முறைகேட்டில் இருந்து மக்களை திசை திருப்பும் வகையில் ஸ்ரீதேவியின் மரண செய்திக்கு மீடியாக்கள் முக்கியத்துவம் கொடுத்தன. அவர் சிறந்த நடிகையாக இருக்கலாம். ஆனால், அவர் நாட்டுக்காக என்ன செய்தார்?. எதற்காக அவர் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டது’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘ஸ்ரீதேவி மரணத்துக்கு முன்பு பிஎன்பி மோசடி பெரிய அளவில் பேசப்பட்டது. இதை மாற்றுவதற்காக ஸ்ரீதேவி மரண விவகாரம் பெரிதுபடுத்தப்பட்டது.

எதற்காக தேசிய கொடி போர்த்தப்பட்டது என்று கேட்டால், பத்ம ஸ்ரீ பட்டம் பெற்றவர் என்று கூறுகின்றனர். அனைத்து தவறுகளையும் மகாராஷ்டிரா அரசு தான் செய்கிறது. பாஜக தலைமையிலான அரசின் அழுத்தத்தில் அனைத்து மீடியாக்களும் செயல்படுகின்றன. ’’என்றார்.