சண்டிகர்:

கொரோனா பாதிப்பு உதவி வழங்குவதில் பாகுபாடு காட்டும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் பஞ்சாப் மாநில மக்களிடம் காங்கிரஸ் கட்சி கேட்டு கொண்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பாரதிய ஜனதா ஆட்சி செய்யத மாநிலங்களுக்கு உதவி செய்வதில் பாகுபாடு காட்டும்  மத்திய  அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  பஞ்சாப் மாநில  மக்கள்  மே ஒன்றாம் தேதி மூவர்ண கொடியை தங்கள் வீடுகளின் ஏற்றி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கேட்டு கொண்டுள்ளது.

கட்சி எம்.எல்.ஏக்களுடன் நடந்த வீடியோ மாநாட்டில் இந்த யோசனையை பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர் முன்வைத்தார்.

தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக மாத வருமானமாக மாநிலம், 3 ஆயிரத்து 360 கோடியை இழந்து வருவதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் சுட்டிக்காட்டினார். மேலும் இந்தாண்டில் பஞ்சாப் மாநிலத்திற்கு கிட்டத்தட்ட 50,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நெருக்கடியைச் சமாளிக்க மத்திய அரசு இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

முன் எப்போதும் இல்லாத இந்த நெருக்கடியில் மே ஒன்றாம் தேதியும் இணைந்துள்ளது, மத்திய அரசின் உதவி கோரியதையும், அதில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதையும் அடிக்கோடிட்டுக் காட்ட உதவும் என்று சுனில் ஜாகர் கூறினார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், பஞ்சாப் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். மத்திய அரசு எங்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட முடியாது என்று அவர் கூறினார்.

கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான அரசின் முயற்சிகளுக்கு உதவும் வகையில் காங்கிரஸ் கட்சி 20,000 கோடி ரூபாய் உடனடி நிவாரணமாக கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், பாகுபாடு காட்டி வரும் மத்திய அரசை எதிர்த்து மே 1-ஆம் தேதி தேசிய கொடியை வீடுகளில் ஏற்றி வைக்கும் நிகழ்வு பொதுமக்கள் மட்டுமின்றி, விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் அனைத்து கொரோனா வீரர்கள் ஆகியோரும் பங்கேற்று தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் ஜாகர் கூறினார்.

மேலும் பேசிய அவர், பஞ்சாப் எதையும் பிச்சையாக கேட்க வில்லை என்றும் மாநிலங்களுகான பங்கையே கேட்கிறது என்றும் கூறினார். எப்படியிருந்தாலும், மற்ற மாநிலங்கள் கோரியதை ஒப்பிடுகையில் பஞ்சாப் மத்திய அரசிடம் கேட்பது மிகக் குறைவு என்று அவர் கூறினார்.