“காவலன்” மொபைல் ஆப் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்! காவல்துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்தல்

Must read

சென்னை:

நாட்டில் பெருகிரும் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் தமிழக காவல்துறையினர் காவலன் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

இந்தசெயலி குறித்து, பொதுமக்களிடையே குறிப்பாக பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு டிஜிபி திரிபாதி  சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

நாடு முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஐதராபாத்தில் நடைபெற்ற இளம் மருவத்துவர் பாலியல் கொலை போன்ற சம்பவங்களால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி யாகி உள்ளது.

இந்த நிலையில், தமிழக போலீசாருக்கு டிஜிபி திரிபாதி, காவலன் மொபைல் ஆப் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என்று வலியுறுத்தி உள்ளார்.

அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

1) ”ஆபத்து என்று அழைப்பு வந்தால் போலீசார் உடனடியாக உதவ வேண்டும். புகாரின் உண்மைத் தன்மை குறித்து விசாரித்து நேரத்தை வீணாக்கக் கூடாது.

அண்மையில், ஹைதராபாத் அருகில் கால்நடை பெண் மருத்துவரை லாரி ஓட்டுநர்கள் சிலர் வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் என்பது, உதவி கோரி வரும் அழைப்புகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய விழிப்பு மிக்க, உறுதியான செயல்பாடுடைய கட்டமைப்பின் அவசியத்தை காவல்துறைக்கு நினைவூட்டுகிறது.

சம்பவம் நடந்த பின்னர் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளினால் எந்தப் பயனும் ஏற்படாது.

2)  அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கீழ்க்காணும் நடைமுறைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கோரப்படுகிறார்கள் :-

அ) உதவி கோரி வரும் அழைப்புகள் / குறுஞ்செய்திகள் | தகவல்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தங்களின் கீழ் பணிபுரியும் அனைத்து காவல் ஆளினர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும்.

ஆ)காவல் ஆளினர்கள் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் சம்பந்தமான நடவடிக்கையை காவல் சரக எல்லை, நடைமுறை சிக்கல்கள் போன்ற வரைமுறைகளைத் தாண்டி தாமதமின்றி எடுக்கவேண்டும்.

இ) பிரச்சினையின்போது, உடனடியான மற்றும் கூர்மையான செயல்திறனுடன் ஒவ்வொரு காவல் ஆளினரும் செயல்படவேண்டும். தொழில் ரீதியிலான உணர்வுடனும், பொறுப்புணர்வு டனும் செயலாற்றாமை போன்றவற்றால் காவல் ஆளினர்கள் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

ஈ) உதவி கோரி, குறிப்பாக பெண்கள், சிறார்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளிடமிருந்து வரும் அழைப்பினை பெறும் காவல் ஆளினர், மற்றவர்களை ஒருங்கிணைத்து மீட்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்பது அவரது கடமையாக கருதப்படுகிறது. தகவலின் உண்மை நிலை பற்றிய விசாரணையில் ஈடுபட்டு காலம் தாழ்த்தாமல், சம்பந்தப்பட்ட காவல் ஆளினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல வேண்டும்.

உ) சம்பவ இடத்திற்கு விரைந்து செல்கையில், தனது உயர் அதிகாரிகளுக்கு சம்பவம் குறித்த தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.

3). ஹைதராபாத் சம்பவம் போன்றவற்றை தடுக்கும்விதமாக, ‘காவலன் கைப்பேசி செயலி’ ஒன்றை தமிழக காவல்துறை உருவாக்கியுள்ளது. இதனைக் கட்டணம் ஏதுமின்றி பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இத்தகைய செயலி குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் காவல் ஆளினர்களிடையே, குறிப்பாக ஊரகப் பகுதிகளில், ஏற்படுத்த வேண்டும். காவலன் கைப்பேசி செயலி’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து மாநகர காவல் ஆணையர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் :-

அ) காவலன் கைப்பேசி செயலி’யை பதிவிறக்கம் செய்வது, உபயோகப்படுத்துவது மற்றும் அதன் பயன்கள் குறித்து சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, ஆயுதப் படை உள்ளிட்ட அனைத்து காவல் ஆளினர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும். இது குறித்த விளம்பரத் தட்டிகளை காவல் நிலையங் கள், மாவட்ட காவல் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேருந்து மற்றும் இரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் வைக்க வேண்டும். மேலும், திரையரங்குகளில் விளம்பர ஸ்லைடுகள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஆ) பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பெண்கள் தங்கும் விடுதிகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் உள்ளிட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் படிக்கும் | வேலை செய்யும் | வசிப்பிடங்களுக்கு காவல் அலுவலர்கள் சென்று ‘காவலன் செயலி’ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் அதனைப் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தி,உபயோகிக்கும் முறை பற்றியும் எடுத்துரைக்க வேண்டும்.

இ)காவலன் கைப்பேசி செயலி’யை பொதுமக்கள் மத்தியிலும், குறிப்பாக பெண்கள், சிறார்கள், மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோரிடம் பிரபலப்படுத்துவது என்பது அனைத்து காவல் ஆளினர்களும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பாகும்.

ஈ) பொதுமக்கள் ‘காவலன் கைப்பேசி செயலி’யை பதிவிறக்கம் செய்ய ஊக்குவிப்பதுடன், அவசர காலத்திலும், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படக்கூடிய சமயங்களிலும் இதனைப் பயன்படுத்த அறிவுறுத்தலாம்.

உ)”காவலன் கைப்பேசி செயலி’யை பிரபலப்படுத்த பல்வேறு சங்கங்களின் ஆண் மற்றும் பெண் உறுப்பினர்கள், காவல் நண்பர்கள் குழு, தேசிய சாரண சாரணியர் இயக்கம், ஊர்க் காவல் படை, கிராம விழிப்புணர்வு குழுக்கள் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

ஊ) பெண்கள் மற்றும் சிறார்கள் ஆபத்துக் காலங்களில் காவல்துறையின் உதவியை நாட ஊக்குவிக்கலாம்.

எ) பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, ‘காவலன் – கைப்பேசி செயலி’யை பயன்படுத்த செய்தி ஊடகங்கள், தொலைக்காட்சி, எப்.எம்.ரேடியோ மற்றும் இதர டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தலாம்.

ஏ) மாநகரம் மற்றும் மாவட்டங்களில் உள்ள பெண் காவல் அலுவலர்கள் மற்றும் ஆளினர்களை இச்செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஈடுபடுத்தலாம். இது ஒரு முறை மட்டும் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை அல்ல, மாறாக தொடர் நடவடிக்கையாக இருக்க வேண்டும். எனவே, உயரதிகாரிகள் அவ்வப்போது இது குறித்த ஆய்வு மேற்கொண்டு தகுந்த ஆலோசனைகளை வழங்கலாம்.

4). சிறந்த பயன்களைப் பெற, நீங்கள் சிறந்தவற்றை செய்யவேண்டாம், நீங்கள் மேற்கொள்ளும் சிறிய செயலையும் சிறந்த முறையில் செய்யவேண்டும். சிறிய செயல்களினால் விளையும் சிறந்த பயன்கள் குறித்து நாம் பலமுறை குறைத்தே மதிப்பிடுகிறோம்.

5). காவல் துறையின் தலைமை இயக்குநர் என்ற வகையில், எனது காவல் ஆளினர்களிடம், குறிப்பாக பெண் அலுவலர்கள், இந்த முயற்சியினை முன்னெடுத்து, பெண்கள், சிறார்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முன்னோடியாக திகழவேண்டும்.

6). ஒவ்வொரு மாநகர காவல் ஆணையரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், சரக காவல் துணைத் தலைவர் மற்றும் மண்டல காவல்துறை தலைவர் ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல்களின்படி, ‘காவலன் கைப்பேசி செயலி’யின் பயன்பாட்டை ஊக்குவிக்க தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் அதனால் விளைந்த பயன்கள் குறித்து வருகிற 10.01.2020ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொன்றேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

More articles

Latest article