சென்னை:

கோடையின் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில்,  மிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதை மெய்ப்பிக்கும் வகையில் தமிழகத்தில் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் ஓரளவுக்கு தணிந்துள்ளது.

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.அதன்படி, உள்கர்நாடகம் முதல் தென் தமிழகம் வரை காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், இன்றும்,  நாளையும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம். தென் தமிழகத்தில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று அறிவித்திருந்தது.

தமிழகம், புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று காலை முதல்  ராமநாதபுரம் சுற்றுவட்டாரங்களில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. பல இடங்களில் திடீரென இடி மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

இதேபோல் கமுதி, கோட்டைமேடு, உலகுநடை, பாக்குவெட்டி, சோடனேந்தல் உள்ளிட்ட பகுதிகளிலும் கோடை மழை பெய்தது. வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அதுபோல, திருநெல்வேலி மாவட்டம் டவுன், பாளையங்கோட்டை, வண்ணாரப்பபேட்டை, கே.டி.சி நகர், முருகன்குறிச்சி, புதிய பேருந்து நிலையம், என்.ஜி.ஓ காலனி, பெருமாள்புரம், நெல்லைஜங்சன் உள்பட பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தொடங்கியது. குறிப்பாக மலை கிராமங்களில் பலத்த மழை பெய்தது.

சிற்றார், களியல், குலசேகரம்,குழித்துறை, திருவட்டார், சிவலோகம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி பகுதிகளில் பெய்த மழை,பின்னர் குமரி கிழக்கு மாவட்ட பகுதிகளான மயிலாடி, கொட்டாரம், தக்கலை, இரணியல், குருந்தன்கோடு பகுதிகளிலும் பெய்தது.

நேற்று மாலை முதல் மேற்குதொடர்ச்சி மழை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குமாரி மாவட்டத்தில்,  அதிக பட்சமாக குழித்துறையில் 54.4 மி.மீ. மழை பெய்தது.

குமரி மாவட்டத்தில் பெய்த திடீர் கோடை மழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்தது. குறிப்பாக பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1.40 அடியாக உயர்ந்தது.

பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 18.20 அடியாகவும், பொய்கை அணையின் நீர் மட்டம் 10.30 அடியாகவும் இருந்தது. சிற்றார் 1 அணையின் நீர் மட்டம் 5.18அடியாகவும், சிற்றார் 2 அணையின் நீர் மட்டம் 5.28 அடியாகவும் இருந்தது. மாம்பழத்துறையாறு அணையின் நீர் மட்டம் 43.64 அடியாக உள்ளது.

கோடை மழை காரணமாக குமரி மாவட்டத்தில் நேற்றிரவு வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடைக்கானல், குழித்துறை மற்றும் பேச்சிப்பாறை பகுதிகளில் தலா 5 செமீ மழை பதிவாகி உள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், திடீரென மழை பெய்திருப்பது கோடை வெப்பத்தை சற்று குறைத்திருக்கிறது.