கனிமொழி வீட்டில் ஏதும் கைப்பற்றப்படவில்லை: சத்தியபிரதா சாஹு விளக்கம்

சென்னை:

மிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கனிமொழி தங்கியிருந்த வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், ஏதும் கைப்பற்றப்படவில்லை என்றும், தகவல் கிடைத்ததன் அடிப்படையிலேயே சோதனை நடைபெற்றதாக  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு விளக்கம் அளித்துள்ளார்.

நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வந்தனர். நேற்று இரவு தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீட்டிலும் அதிரடி சோதனை நடைபெற்றது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில்  இதுவரை 138 கோடியே 57 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ரூ.3.16 கோடி பறிமுதலாகி இருக்கிறது. ரூ.43.5 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பிடிபட்டுள்ளன என்று தெரிவித்தார்.

தூத்துக்குடியில் கனிமொழி தங்கி இருந்த வீட்டில் நடைபெற்ற சோதனை  திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்றும், மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு எஸ்.எம்.எஸ். மூலம் கிடைத்த தகவலை தொடர்ந்தே அங்கு தேர்தல் பறக்கும் படையினரும், வருமான வரித் துறையினரும் சோதனை நடத்தினார். ஆனால், அங்கு  பணம் எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. அதிகாரிகள் திரும்பி வந்து விட்டனர் என்று கூறினார்.

அதுபோல ஆண்டிப்பட்டியிலும் பணம் பதுக்கி வைத்து இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டருக்கு தகவல் வந்ததால், பறக்கும் படையினரும், வருமான வரித் துறையினரும் சோதனை நடத்தினார்கள். இதில் ஒரு கோடிக்கு மேல் பணம் பிடிபட்டதாக தகவல் வந்துள்ளது. முழு விவரம் இனிமேல்தான் தெரிய வரும் என்றவர்,  தேர்தல் ஆணையம் அதிகாரிகளுக்கு வரும் தகவலையடுத்து கட்சி பாகுபாடு இல்லாமல் சோதனை நடத்துகிறது என்று தெரிவித்தார்.

அப்பபோது  செய்தியாளர் ஒருவர், .‘எதிர்க்கட்சியை சேர்ந்த துரைமுருகன், கனிமொழி, வசந்தகுமார்  போன்றவர்களின் வீடுகளில் மட்டுமே  சோதனை நடைபெறுகிறதே,  அ.தி.மு.க. கூட்டணி சம்பந்தபட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படவில்லையே… தேர்தல் ஆணையம் இதில் ஒருதலை பட்சமாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த சாஹு,  எங்களுக்கு கிடைக்கும் தகவல்களை வைத்துதான்  சோதனை நடத்துகிறோம். இதில் கட்சி  பாரபட்சம் பார்ப்பது இல்லை. விதி மீறலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: ITRaid, Knaimozhi, Nothing seizures, Sathyaprada sabhu, theni raid
-=-