தேனி தொகுதியில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுக சதி: டிஜிபியிடம் காங்கிரஸ் புகார்

சென்னை:

தேனி பாராளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற சதி நடப்பதாக டிஜிபியிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு இயந்திரங் களை இன்று பிற்பகல் முதல் தேர்தல் ஆணையம் அனுப்ப ஏற்பாடு செய்து  வருகிறது. தொலைதூர இடங்களுக்கு முதலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட உள்ளது. அதைத்தொடர்ந்தே அருகில் உள்ள பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் பரபரப்போடு காணப்படுகின்றனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உள்பட காவல்துறையினரும் முழுவீச்சில் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஓபிஎஸ் மகன் போட்டியிடும்  தேனி பாராளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற சதி நடப்பதாக டிஜிபியிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளனர்.

தேனி நாடாளுமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் ரவிந்திரநாத், திமுக கூட்டணி சார்பில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக கட்சி சார்பில் தங்கத்தமிழ்செல்வன் ஆகியோர் களமிறங்கி உள்ளனர். அங்கு பரபரப்பான பிரசாரங்கள் நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், அங்கு வாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளுங்கட்சியினர் சதி செயலில் ஈடுபட்டு வருகின்றனர், என்று காங்கிரஸ் நிர்வாகி தாமோதரன் தலைமையிலான குழுவினர், தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் புகார் மனு கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தாமோதரன், தேனி தொகுதியில் எதிர்க்கட்சி வேட்பாளர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் விரட்டியடிக்க சதி நடப்பதாகவும், பிற்பகல் 2 மணிக்கு மேல் வாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஓ.பி.எஸ் தரப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: AIADMK i, Congress complaint, election DGP, seize polling booths
-=-