சென்னை; மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில்  பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக  அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்தது. இதனால் ஏரி, குளம், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிந்தது. பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, மணிமுத்தாறு, காரையாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.  மேலும் ஏரிகள், குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்ததால் நெல்லை, தூத்துக்குடி மக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். எங்கு பார்த்தாலும் வெள்ளம் தான் என்கிற நிலையில் அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர்.

மேலும் சாலைகளும் துண்டிக்கப்பட்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தண்டவாளங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கும் நிலையில் உள்ளதால் ரயில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.  அங்கு மீட்புபணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி விருதுநகர் மாவட்டங்களில் வரும் 23ம் தேதி வரை நடைபெற இருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 

தொலைதூரக் கல்வி இயக்கத்தின் நாகர்கோவில் மையத்தில் பதிவு செய்திருந்த மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.