நெல்லை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. ஏராளமான ராணுவ வீரர்கள் மட்டுமின்றி, பேரிடர் மீட்பு பணி வீரர்கள் 550 பேர், தீயணைப்பு காவல்துறை மற்றும் காவல்துறையினர் உடன்  6 ஹெலிகாப்டர்களும் களமிறங்கி உள்ளன. இதன் காரணமாக, தென் மாவட்டங்களில் மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

நிவாரண பணிகளில் அமைச்சர்கள் உதயநிதி, தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி. உள்பட பலர் களத்தில் உள்ளனர். மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அதீத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், வெள்ள நீர் வடிய தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.  மீட்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்தது. இதனால் ஏரி, குளம், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிந்தது. பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, மணிமுத்தாறு, காரையாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.  மேலும் ஏரிகள், குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்ததால் நெல்லை, தூத்துக்குடி மக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். எங்கு பார்த்தாலும் வெள்ளம் தான் என்கிற நிலையில் அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். மேலும் சாலைகளும் துண்டிக்கப்பட்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தண்டவாளங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கும் நிலையில் உள்ளதால் ரயில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.  அங்கு மீட்புபணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கனமழை முதல் அதிகனமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களிலிருந்து அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு அவசரகால உதவிகளை வழங்கிடவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மாண்புமிகு மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும்கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பால்வளத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் ஆகிய அமைச்சர்கள் உடனடியாக அனுப்பப்பட்டு, அவர்கள் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, எஸ். ஞானதிரவியம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேலும் துரிதப்படுத்தி பணிகளை விரைவுப்படுத்த கூடுதலாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகிய அமைச்சர்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நியமித்துள்ளார்.

மேலும், கனமழையால் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து சமூக வலைதளத்தின் (Social Media) மூலம் தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் எண்: 8148539914 மற்றும் “டிவிட்டர்” மூலமாக பதிவுகளை தெரிவிக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, “திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 550 வீரர்கள் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க களமிறங்கியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு அவசரகால உதவிகளை வழங்கிடவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மாண்புமிகு மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும்கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பால்வளத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் ஆகிய அமைச்சர்கள் உடனடியாக அனுப்பப்பட்டு, அவர்கள் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு, நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரில் தத்தளித்த சிலர் மீட்கப்பட்டனர். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டு மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர்

தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்படுகிறது. தூத்துக்குடியில் 2 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகிக் கப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளில் பயிற்சி பெற்ற 100 பேர் களமிறங்கி உள்ளனர். 168 ராணுவ வீரர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே இரண்டு நாட்களுக்குப் பிறகு நெல்லை, தூத்துக்குடியில் மழையின் அளவு குறைய தொடங்கியுள்ளது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு போன்ற அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று அணைகளில் இருந்து சுமார் 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 17 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

143 அடி கொள்ளளவு காரையாறு அணையில் தற்போது அணையின் நீர்மட்டம் 137 அடியாக உள்ளது. காரையாறு, சேர்வலாறு அணைகளுக்கு வினாடிக்கு 8400 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 11,560 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் தற்போது 109 அடியாக உள்ளது.அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும் நிலையில், அதே அளவு தண்ணீர் உபரிநீராக அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

இதனால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைந்துவிட்டது. குறிப்பாக, நேற்று கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சூழ்ந்தது. இன்று அதிகாலை ஆட்சியர் அலுவலகத்தில் தேங்கி இருந்த தண்ணீர் வடியத் தொடங்கியது. அதேபோல், நிலை சந்திப்பு பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரும் பெருமளவு பதிந்து விட்டதால், தற்போது அங்கு மாட்டிக்கொண்ட மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிற

து. மேலும், மாநகரின் பல்வேறு இடங்களில் தண்ணீர் வடிய தொடங்கியுள்ளதால் அடுத்த கட்டமாக, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அரசு அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.இந்த நிலையில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் செல்லும் சாலையில் தேங்கிய தண்ணீரில் தான் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்டு பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மீட்புப்படையினர், அந்த சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முழுவதுமாக இல்லாவிட்டாலும் பெரிய அளவில் மழை இல்லாத நிலையில் நகரின் பெரும்பாலான இடங்களில் வெள்ள வடிநீர் வடியத் தொடங்கியுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது. வெள்ளம் சூழந்த பகுதியில் பைபர் படகு செல்ல முடியாத நிலையில் ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களை மீட்கும் பணியும், உணவுப் பொருட்கள் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

நெல்லையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் வடியத் தொடங்கியது. இந்நிலையில், வெள்ளத்தில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று மிதந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அணைகளில் இருந்து நீர் திறப்பின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. கிட்டதட்ட 7 அடி உயரத்துக்கு நீரின் அளவு குறைந்துள்ளது. தமிழ்நாடு அமைச்சர்கள் நெல்லை, தூத்துக்குடியில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். வெள்ளம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது. ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் அரசு தங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.