பம்பா: கேரளாவில் மழை- வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சபரிமலை வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர்.  தேனி மாவட்ட எல்லையில் கேரள காவல்துறையினர் பக்தர்கள் உள்ளே நுழைய தடை விதித்து திருப்பி அனுப்பி வருகிறார்கள்.

துலா மாத பிறப்பையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 17ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கோவில் நடை வருகிற 21-ந்தேதி வரை திறந்திருக்கும். இதனால் பக்தர்கள் சபரிமலை செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஆனால், கேரளாவில் கடந்த சில நாட்களாக கொட்டி வரும் மழை காரணமாக, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதுடன் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி, சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் வரவேண்டாம் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. அதன்படி, மாநில எல்லையில், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் சபரிமலை வரும் பக்தர்களை மாநிலத்திற்குள் அனுமதிக்காமல், திருப்பி அனுப்பி வைத்து வருகின்றனர்.

தமிழகத்தின் மற்றொரு எல்லையான தேனி மாவட்ட எல்லையில் காவல்துறையினர், சபரிமலை வரும் பக்தர்களி திருப்பி அனுப்பி வருகிறார்கள்.