சென்னை: முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.51கோடி சொத்து குவித்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளது. அதையடுத்தே இன்று  லஞ்சஒழிப்பு போலீசார் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை செய்து வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில்  சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள இலுப்பையூர் அருகே ராப்பூசல் கிராமம். இவர் அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதுடன், இன்று அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். அவரது சொந்த ஊரில் உள்ள வீடு மற்றும் சுற்றுவட்டார ஊர்களிலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அவருக்கு நெருக்கமானவர்கள் உள்பட மொத்த  43 இடங்களில் அதிரடி சோதனை நடைபெறுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே  முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, எஸ்.பி.வேலுமணி, செந்தில் பாலாஜி உள்பட பலருக்கு சொந்தமான இடங்களில் வருவமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், இன்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.