பாட்னா: பீகார் மாநிலத்தில் ரயில்வே துறையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், போலி ஆவணங்களைக்கொண்டு ரயில் எஞ்சினை விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம் சமஸ்திபூர் ரயில்வே கோட்டத்தில் லோகோ டீசல் ஷெட்டில் பொறியாளராக பணியாற்றி வருபவர் ராஜீவ் ரஞ்சன் ஜா. இவர் அந்த கோட்டத்தைச் சேர்ந்த  பூர்ணியா நீதிமன்றம் ஸ்டேஷன் அருகே பல ஆண்டுகளாக நின்று கொண்டு இருந்த சிறிய நீராவி என்ஜினை போலி ஆவணங்கள் மூலம் பழைய இரும்பு வியாபார டீலருக்கு விற்பனை செய்துள்ளார்.

இந்த விற்பனை கடந்த டிசம்பர் 14-ம் தேதி நடைபெற்றுள்ளது. இதையடுத்து எஞ்சினை உடைத்து  எடுத்துச்செல்ல இரும்பு வியாபாரி வந்தபோதுதான், இந்த பலே மோசடி தெரியவந்தது. இது  ரயில்வே துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ராஜீவ் ரஞ்சன் ஜாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, இந்த ரயில் என்ஜினை உடைக்கnவா, விற்பனை செய்யவோ  ஏதேனும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதா என சரிபார்த்த போது அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் உடைக்கப்பட்ட ரயில் எஞ்சின் பாகங்கள், அது சேமித்து வைக்கப்படும்  டீசல் ஷெட்டிற்கும் வரவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட பொறியாளர் ராஜீவ் ரஞ்சன் ஜா,  அவருக்கு உடந்தையாக இருந்த ரயில் நிலைய பாதுகாவலர், ஊழியர்கள் என மொத்தம் 7 பேரை கைது செய்த போலீசார், அவர்கள்மீது ரயில் என்ஜினை மோசடி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளார். இதையடுத்து,  சம்பந்தப்பட்ட ரயில்வே பொறியாளர் ராஜீவை ரெயில்வே நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.