டில்லி:

ரயில்வே வாரியத் தலைவரை வரவேற்கவும், வழியனுப்பவும் மூத்த அதிகாரிகள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி விஐபி கலாசாரத்துக்கு ரயில்வே அமைச்சகம் முடிவு கட்டியுள்ளது.

துறை சார்ந்த பணி காரணமாக வருகை புரியும் ரயில்வே வாரியத் தலைவர், உயரதிகாரிகள் ஆகியோரை அவர்களுக்கு அடுத்த நிலையில் பணிபுரியும் அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்று அவர்கள் பணிமுடிந்து திரும்புகையில் வழியனுப்பவும் வேண்டும் என்பது கடந்த 36 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது.

கடந்த 1981-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ரயில்வே சட்ட விதிகள் இதற்கு துணை புரிந்தது. இந்நிலையில், இந்த நடைமுறைக்கு முடிவு கட்டும் வகையில் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் புதிய வழிகாட் டுதல்களை பிறப்பித்துள்ளார்.

அதில், ‘‘ரயில்வே வாரியத் தலைவரை விமான நிலையம் அல்லது ரயில் நிலையத்துக்குச் சென்று பொது மேலாளர்கள் இனி வரவேற்கத் தேவையில்லை. அதேபோல், அவர் பணி முடிந்து வீடு திரும்பிச் செல்லும்போது ரயில் நிலையம் அல்லது விமான நிலையத்துக்குச் சென்று பொது மேலாளர்கள் வழியனுப்ப தேவையில்லை. இந்த நடைமுறையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்.

ரயில்வே அதிகாரிகள் நீண்ட நாட்கள் விடுப்பில் இருக்கக் கூடாது. பணி காரணமாக வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டால் சொகுசு பயணம் மேற்கொள்ளக்கூடாது. 2ம் வகுப்பு படுக்கை வசதி மற்றும் மூன்றடுக்கு ஏசி வசதிகளை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

‘‘யாரும் மலர் கொத்து அல்லது பரிசுப் பொருட்கள் அளித்து தன்னை வரவேற்க வேண்டாம்’’ என்று ரயில்வே வாரியத்தின் தலைவர் அஸ்வனி லோஹனியும் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரயில்வேயின் கடைநிலை ஊழியர்கள் 30 ஆயிரம் பேர் உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை திரும்ப பெறவும் உத்தரவிடப்ப்ட டுள்ளது. இந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரை பணிக்கு திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்களும் விரைவில் பணிக்கு திரும்புவார்கள்’’ என்றார்.