திருச்சி :
திருச்சி ரயில் நிலையத்தில் இன்று முதல் பிளாட்பாரம் டிக்கெட் விலை ரூ.10 லிருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுளளது. . தஞ்சை, கும்பகோணம், நாகையிலும் ஆகஸ்ட் 15 முதல் பிளாட்பாரம் டிக்கெட் விலை ரூ.20 ஆக உயர்த்தப்பட உள்ளது.
“ரயில் நிலையங்களின் உள் தேவையின்றி பலர் வந்து அமர்வதைத் தடுக்கவே இந்த உயர்வு” என்று ரயில்வே உயர் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
“தேவையற்றவர்கள் உள்ளே வருவதைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப்படை இருக்கிறதே..” என்று பயணிகள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது.
மேலும், “ரயில் பயணத்துக்கு ஐந்து ரூபாய் முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் வழியனுப்ப வருகிறர்களுக்கு இருபது ரூபாய் பிளாட்பார்ம் கட்டணமா” எனறும் கண்டனம் எழுந்துள்ளது.
தவிர, “இந்த பிளாட்பார்ம் கட்டணம் ஒரு மணி நேரத்துக்குத்தான் செல்லும். பொதுவாக நீண்ட தூர ரயில்கள் பல மணி நேரம் தாமதமாய் வருவது வழக்கமாக இருக்கிறது. அப்படியானால் வழியனுப்ப வருபவர்கள் மணிக்கொருமுறை பிளாட்ஃபார்ம் டிக்கெட் எடுக்கவேண்டுமா” என்றும் பயணிகள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள்.
சமீபத்தில்தான், “ஏ.சி. பெட்டிகளில் வழங்கப்படும் பெட்ஷீட்கள் துவைக்கப்படுவதில்லை என்றும் ரயிலில் வழங்கப்படும் சாப்பாடு சரியில்லை என்றும் சி.ஏ.ஜி. குற்றம் சாட்டியது.
உடனே “இனி ஏ.சி. பெட்டிகளில் பெட்ஷீட்கள் வழங்கப்படாது” என்றும், “ரயில் உணவு சரியில்லை என்றால் பயணிகள் தாங்களே உணவு கொண்டுவரட்டும்” என்றும் அலட்சியமாக ரயில்வே துறை அறிக்கை விட்டது.
தற்போது பொறுப்புணர்வின்றி பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது.
ரயில்வே துறையின் நடவடிக்கைகள் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.
கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம்தான் ஐந்து ரூபாயில் இருந்து பத்து ரூபாயாக பிளாட்பார்ம் கட்டணம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.