சென்னை:
ரக்கோணம் சென்ற மின்சார ரெயிலில் இரு கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதிலில் 12 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

மாணவர்கள் மோதல் நடைபெற்ற ரெயில் நிலையம்
                     மாணவர்கள் மோதல் நடைபெற்ற ரெயில் நிலையம்

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்த மோதல் கொலை வரை சென்று விடுவதும் உண்டு. படிக்கும் மாணவர்கள் அரிவாளை தூக்கிக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவம் சென்னையில் அதிகரித்துக்கொண்டு வருகிறது. ரெயில்வே போலீசார் இதை கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நேற்று மாலை 3 மணி அளவில் சென்ட்ரலிலிருந்து அரக்கோணம் நோக்கி புறப்பட்ட மின்சார ரெயிலில் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், சேப்பாக்கம் மாநிலக்கல்லூரி மாணவர்களும் பயணம் செய்தனர்.
சென்ட்ரலில் ரெயில் புறப்படும் முன்பே இரு கல்லூரி மாணவர்களும் தகராறில் ஈடுபட்டனர்.   இதை பார்த்துக்கொண்டிருந்த சென்ட்ரல் ரெயில்வே போலீசார் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. ரெயில் புறப்பட்டதும் மாணவர்களுக்கிடையே  கைகலப்பு ஏற்பட்டது. அதில் பச்சையப்பன் கல்லூரி மாணவர் சுமன்  தாக்கப்பட்டார்.
சுமன் தாக்கப்பட்ட சம்பவம் போன் மூலம்ம் அவரது  ஊரைச் சேர்ந்தவர்களுக்கும், அவருடன் படிக்கும் மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அவர்கள்  நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் ஆயுதங்களுடன் காத்திருந்தனர்.
மின்சார ரயில், நெமிலிச்சேரி ரெயில் நிலையம் வந்ததும், அவர்கள் மாநிலக்கல்லூரி மாணவர்களை அரிவாள், கத்தி, கிரிக்கெட் மட்டை போன்றவற்றால் பயங்கரமாக தாக்கினர்.
இந்த தாக்குதலில் வேப்பம்பட்டைச் சேர்ந்த சண்முகம, திருநின்றவூரைச் சேர்ந்த கணேஷ், திருவள்ளூரைச் சேர்ந்த பார்த்திபன், சுகன், கார்த்திக், முகமதுஅலி, இப்ராகிம், விக்னேஷ், ஜானகிரான், அஜித்குமார், கடம்பத்தூரைச் சேர்ந்த கார்திக், புட்லூரைச் சேர்ந்த சரத்  ஆகியோர் காயமடைந்தனர்.
மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்வதை கண்ட பொதுமக்கள் பயந்து ரெயிலை விட்டு இறங்கி ஓடினர். மோதல் குறித்து ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால் அருகிலுள்ள ஆவடி ரெயில்வே போலீசார் இது எங்கள் எல்லை இல்லை என்றும், திருவள்ளுர் போலீசார் எங்கள் எல்லை என்றும் எல்லை பிரச்சினை பற்றி பேசி நடவடிக்கை எடுக்க மறுத்தனர். பின்னர் பெரம்பூர் ரெயில்வே காவல்துறை உயர் அதிகாரிகள் வந்து திருவள்ளுர்  ரெயில்வே போலீசாரை வழக்குபதிவு செய்து விசாரணை செய்ய ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து 4 மாணவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
கல்லூரி மாணவர்களுக்கிடையேதான் “ரூட் தல” பிரச்சினை என்று மோதிக்கொள்கிறார்கள் என்றால் போலீசாருக்குள்ளும் எல்லை பிரச்சினை காரணம் காட்டி மோதிக்கொள்வது வெட்கக்கேடானது.
பொதுவாக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள், கல்லூரிக்கு வரும் மாணவர்கள் மின்சார ரெயிலையே நம்பி வருகின்றனர். காரணம் பயண செலவும், பயணிக்கும் நேரமும் குறைவு. ஆனால் நாளுக்கு நாள் ரெயில் பயணம் பாதுகாப்பு இல்லையோ என எண்ணத் தோன்றுவதாக பொதுமக்கள் குமுறுகின்றனர்.