மதுரை: உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் தேர்வு செய்யப்பட்டவர்களை தெற்கு ரயில்வேக்கு பணியமர்த்தும் நடவடிக்கையை எதிர்த்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மத்தியஅரசுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, இந்தியன் ரயில்வே, தனது அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளது.

தென்னக ரயில்வே உதவி ரயில் ஓட்டுநர் பணிக்கு உ.பி. கோரக்பூரைச் சேர்ந்த பலர் தேர்வாகியிருந்தனர். அவர்களுக்க தமிழ்நாட்டில் பணி வழங்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி வழங்காமல், வடமாநிலத்தவருக்கு பணி வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தெற்கு ரயில்வே பொதுமேலாளரை சந்தித்து மனு கொடுத்தனர்.  அதில், உ.பி. கோரக்பூரில் தேர்வானவர்களை நியமித்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் தென்மாநில விண்ணப்பதாரர்களை உடனடியாக ரயில் ஓட்டுனர் பணியிடங்களில் நியமிக்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

இதுதொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் இந்தியன் ரயில்வேக்கு காட்டமாக கடிதம் எழுதினார்.  அதில்,  உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 விண்ணப்பதாரர்களை தெற்கு ரயில்வே உதவி ஓட்டுனர் பணிகளுக்கு நியமித்தும், தெற்கு ரயில்வேயின் சென்னை தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை புறக்கணித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உ.பி. கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேரின் மதிப்பெண்கள் தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களை விடக்குறைவு. ரயில்வே பிற மண்டலங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களை தெற்கு ரயில்வேயில் நியமிப்பது சட்டவிரோதம்.

ஏற்கனவே டெக்னீசியன் பிரிவில் தெற்கு ரயில்வேக்கு விண்ணப்பித்தவர்களில் 60 சதவீதம் பேர் இந்தியில் தேர்வு எழுதி வந்தவர்கள். இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை  புறக்கணித்து, கோரக்பூர் மண்டலத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களை நியமிப்பது கண்டனத்துக்குரியது. ரயில்வே அமைச்சர் உடனே தலையிட்டு அவர்களை கோரக்பூர் திருப்பி அனுப்ப வேண்டும். தெற்கு ரயில்வே காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை உதவி ஓட்டுனர் காலியிடங்களில் நிரப்பவேண்டும். இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால், நேரடி போராட்டத்தில் இறங்குவோம் என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் தேர்வு செய்யப்பட்டவர்களை தெற்கு ரயில்வேக்கு பணியமர்த்தும் நடவடிக்கையை இந்தியன் ரயில்வே திரும்ப பெற்றுள்ளது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன் எம்.பி, உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் தேர்வு செய்யப்பட்டவர்களை தெற்கு ரயில்வேக்கு பணியமர்த்தும் நடவடிக்கை முறியடிப்பு. பட்டியலை திருப்பி அனுப்பியது தெற்கு ரயில்வே. விரைந்து நடவடிக்கைக்கு எடுத்தமைக்கு நன்றி என தெரிவித்து உள்ளார்.