சென்னை:

ஜெயலலிதா வாழ்ந்த  சென்னை  போயஸ் கார்டன் இல்லத்தில் வருமானவரி சோதனை நடப்பது, அவரை தீவிரவாதி போல சித்தரிக்கும் செயல் என்று அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கலைராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வி.கே. சசிகலா குடும்பத்தினரை குறிவைத்து 187  இடங்களில் வருமானவரி சோதனை நடந்தது. இந்த நிலையில் இன்று இரவு, ஜெயலலிதா  வாழ்ந்த சென்னை போயஸ் இல்லத்தில் வருமானவரி சோதனை துவங்கி, நடந்து வருகிறது.

இதையடுத்து சசிகலா – தினகரன் அணியைச் சேர்ந்த பலரும் போயஸ் இல்லம் முன் குவிந்துவருகின்றனர்.  சென்னை மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கலைராஜனும் வந்தார்.

செய்தியாளர்களிடையே பேசிய அவர், “ எங்களைப் பொறுத்தவரை, வருமானவரி சோதனை பற்றி கவலை இல்லை. ஆனால் தொடர்ந்து ஐந்து நாட்கள் குறிப்பிட்ட குடும்பத்தை குறி வைத்து ரெய்டு நடத்தி அவர்களை அசிங்கப்படுத்தும்  முயற்சியைத்தான் கண்டிக்கிறோம்.    எங்கள் அம்மா (ஜெயலலிதா ) வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம், எங்களுக்கு கோயில் போன்றது. அதில் மத்திய அரசின் சதித்திட்டத்தால் வருமானவரி சோதனை நடந்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கது.

ஜெயலலிதாவை ஏதோ தீவிரவாதி போலவும் தேசத்துக்கு துரோகம் செய்தது  போலவும் சித்தரிக்கம் முயற்சி இது. இது  தொண்டர்களை கொந்தளிக்க வைக்கும் செயலாகும்” என்று ஆவேசமாக தெரிவித்தார்.