சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் தேர்வு செய்யப்பட வேண்டும் என இன்று நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சட்டத்திட்டப்படி, மாநில அளவில் 5ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக கடந்த 2017ம்  தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற நிலையில், விரைவில் தேசிய தலைவர் மற்றும் மாநிலத்தலைவர்கள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னதாக,  செப்டம்பர் 15ந்தேதி இந்திய தேசிய காங்கிரஸின் தேர்தல் பிரிவுத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் 9,100 பேரின் பட்டியலை கடந்த வியாழக்கிழமை வெளியிட்டார். அத்துடன்,  பொதுக்குழுக் கூட்டத்தை உடனே நடத்தி மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு அறிவுறுத்தி இருந்தார்.

மதுசூதன் மிஸ்திரி வெளியிட்ட பட்டியலில், தமிழகத்தில் 690 காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.  ஆனால், அவர்களின் விவரத்தை மாநிலத் தலைமைவெளியிடவில்லை.  பொதுக்குழுஉறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு மட்டும், அவர்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாக அழைப்பிதழை மாநிலத் தலைமை நேற்று முன்தினம் அனுப்பி இருந்தது. அத்துடன், மாநில பொதுக்குழு கூட்டத்தில், மாநிலத் தலைவர்கள், தேசியப் பொதுக்குழுஉறுப்பினர்கள் ஆகியோரை நியமிப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்புமாறும் அறிவுறுத்தி இருந்தார்.

அதைத்தொடர்ந்து,  தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறும் என மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார். அதன்படி இன்று (செப். 19) காலை 11.30 மணிக்கு சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ வளாகத்தில், கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மாநில பொதுக்குழு கூட்டம் கூடியது.

இந்த கூட்டத்தில் , கட்சியின் மாநிலத் தலைவர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை, கட்சியின் தேசியத் தலைவருக்கு வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல்காந்தியை தேர்வு செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.