சென்னை,

மிழகம் முழுவதும் விரைவில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.

இலங்கை அரசால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க வலியுறுத்தியும், தமிழக  காங்கிரஸ் சார்பாக  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். மாநில மீனவரணி தலைவர் சபின் முன்னிலை வகித்தார்.  ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து திருநாவுக்கரசர் பேசியதாவது,

காங்கிரஸ் ஆட்சி காலத்திலும், இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் உடனடியாக அப்போதைய காங்கிரஸ் அரசு தலையிட்டு அவர்களை விடுதலை செய்ய வைத்தது.

இப்போதைய பா.ஜனதா அரசு மீனவர் பிரச்சினையை கண்டு கொள்ளவில்லை. தமிழக அரசும் மத்திய அரசை வலியுறுத்தும் நிலையில் இல்லை.

அ.தி.மு.கவை பிளவுபடுத்தி பா.ஜனதா பினாமி ஆட்சியை நடத்துகிறது. மத்திய மந்திரிகள்தான்  தமிழக முதல்வர்கள் போல் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு  இங்குள்ள ஆட்சியாளர்கள் பயந்து நடுங்குகின்றனர்.

தற்போதைய ஆட்சியாளர்கள்,  வழக்குகளில் இருந்து தப்பிப்பது எப்படி? ஜெயிலுக்கு போகாமல் தப்புவது எப்படி? மீதமுள்ள  4 ஆண்டுகளையும் காப்பாற்றி கொள்வது எப்படி என்பதில் தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

ஆனால்,  மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, நாங்கள்  ஆட்சியை கலைக்க மாட்டோம் என்கிறார். இதை பார்க்கும்போது, நாங்கள் நினைத்தால் ஆட்சியை கலைக்க  முடியும் என்ற அச்சுறுத்தல் தான் வெளிப்படையாக தெரிகிறது.

இதுபோல புதுவையிலும் பா.ஜனதா மூக்கை நுழைத்து பிரச்சினையை உருவாக்குகிறது.  ஆனால், தமிழகத்தில் எந்த காலத்திலும் பா.ஜனதா காலூன்ற முடியாது என்றார்.

மேலும், அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர்  ராகுல் காந்தி தமிழக மக்களை நேசிக்கிறார். தமிழக மக்களும் அவரை நேசிக்கிறார்கள்.

விரைவில் ராகுல்  தமிழகம் வர உள்ளார். தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வலுப்படுத்துவார்.

இவ்வாறு திருநாவுக்கரசு  பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் தலைவர்கள்  குமரி அனந்தன், தங்கபாலு உள்பட மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.