டில்லி:

நெஞ்சுவலி காரணமாக  டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் மத்திய அமைச்சரும், பீகார் முதல்வருமான லாலு பிரசாத் யாதவை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஷ்டிரிய ஜனதாதள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கடந்த மார்ச் மாதம் 29ந்தேதி டில்லி அழைத்து வரப்பட்டடு  எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலுவுக்கு  கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம் முதல் சிறு சிறு உடல் நலப்பிரச்சினைகள் வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மலச்சிக்கல், மற்றும்   நெஞ்சுவலியும் ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல சிறை மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இதனையடுத்து கடந்த மாதம் இறுதியில்  ரெயில் மூலம் டில்லி  அழைத்து வரப்பட்டு,  எய்ம்ஸ் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஒரு மாதமாக அங்கு சிகிச்சை பெற்று வரும் லாலுவை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று சந்தித்து பேசினார். அப்போது, அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும், அவர் விரைவில் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார்.