கர்நாடகா மாநிலத்தில் 13 வது நாளாக இன்று நடைபயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மதியம் ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஜஜீரகல்லு சென்றடைகிறார்.

மாலை ஜஜீரகல்லு-வில் தொடங்கி ஒப்ளாபுரம் செல்லும் அவர் இன்றிரவு ஆந்திராவில் தங்குகிறார். கர்நாடாகாவைத் தொடர்ந்து ஆந்திராவிலும் ராகுல் காந்தியை வரவேற்க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முன்னதாக நேற்று ஆந்திர மாநிலத்தை ஒட்டிய சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் வழியாக பயணம் செய்த ராகுல் காந்தியைக் காண ஏராளமானோர் ஆர்வமுடன் கூடினர்.

மலஹள்ளி கிராமத்தின் வழியாக சென்ற ராகுல் காந்தி அங்கு நிலக்கடலை விவசாயிகளுடன் கலந்துரையாடினார் அவர்களின் குறைகளைக் கேட்ட பின்னர் வயலில் இறங்கி நிலக்கடலைச் செடியைப் பிடுங்கி ஆய்வு செய்தார்.

இதனை அடுத்து அங்கிருந்து கிளம்பிய ராகுல் காந்தியைப் பார்ப்பதற்காக மக்கள் பலரும் வீடுகளின் மொட்டைமாடியிலும் அங்குள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் மீது ஏறி நின்றனர்.

இதை கவனித்த ராகுல் காந்தி அங்கு கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் காணும்படி அந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் மீது ஏறி நின்றார் அவருடன் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோரும் ஏறிநின்றனர்.

 

மக்களிடம் நேரடித் தொடர்பில் இருக்க அச்சமின்றி ராகுல் காந்தி மேற்கொண்ட இந்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.