நாகர்கோவில்: காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல்காந்தி பங்குபெறும் குமரி முதல் காஷ்மீர் வரையிலான 3500 கிலோ மீட்டர் 150நாட்களைக் கொண்ட ‘பாரத் ஜோடா யாத்திரை’ செப்டம்பர் 7ந்தேதி குமரியில் தொடங்குகிறது. இதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கட்சி நிர்வாகி களுடன் குமரி மாவட்டத்தில் இன்று 2வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் செப்டம்பர் 7ந்தேதி பாரத் ஜோடா பாத யாத்திரையை தொடங்க உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. ஏற்கனவே அக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தொடங்குவதாக அறிவித்த நிலையில் முன்கூட்டியே செப்டம்பர் 7ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட உள்ளது. இந்த யாத்திரை குமரியில் தொடங்கி பல்வேறு மாநிலங்கள் வழியாக சுமார் 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்தை 148 நாட்களில் கடந்து காஷ்மீர் சென்று அடைகிறது. இந்த யாத்திரையின்போது, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி நடை பயணம் மேற்கொள்கிறார். செப்டம்பர் 7-ந்தேதி குமரியில் பாதயாத்திரையை தொடங்குகிறார்.
ராகுல்காந்தியின் பாதயாத்திரையானது குமரி மாவட்டத்தில் 3 நாட்கள் நடைபெறுகிறது. குமரி கடற்கரையில் தொடங்கி, களியக்காவிளை வரை 65 கிலோ மீட்டர் தூரம் குமரி மாவட்டத்திலேயே 3 நாட்கள் பாதயாத்திரை நடைபெறுகிறது. அங்கிருந்து கேரளாவுக்கு செல்லும் அவர், தனது தொகுதியான வயநாட்டிலும் பாத யாத்திரை செல்லும் வகையில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. முன்னேற்பாடு பணிகளை காங்கிரஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராகுல்காந்தியின் பாத யாத்திரை தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கும் இடங்களை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும் தமிழக மேலிட பார்வையாளருமான வேணுகோபால், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக் விஜய்சிங், ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். கன்னியாகுமரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி நினைவு மண்டபம் காமராஜர் மணிமண்டபம் பாதயாத்திரை தொடக்க விழா நடக்கும் மைதானமான கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி மற்றும் அவர் பாதயாத்திரை செல்லும் பாதைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது குமரி மாவட்ட எம்.பி., விஜய்வசந்த், மற்றும் எம்.பி.க்கள் ஜோதிமணி, டாக்டர் செல்வகுமார் மாணிக் தாகூர், மயூரா ஜெயக்குமார், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், ரூபிமனோகரன், செல்வப்பெருந்தகை, மாநில துணைத்தலைவர் ராபர்ட்புரூஸ், குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி. உதயம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்று 2-வது நாளாகவும் .நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, களியக்காவிளை உள்பட பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
செப்டம்பர் 7-ம் தேதி பாரத் ஜோடா பாத யாத்திரையை தொடங்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு