இன்று பெங்களூரு வந்த ராகுல்காந்தி, மாநகராட்சி தொழிலாளர்களை சந்தித்து பேசினார்.

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இதனால் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

இந்த நிலையில்  காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி கர்நாடகத்தில் ஏற்கனவே ஐதராபாத்-கர்நாடக, மும்பை கர்நாடகம், பழைய மைசூரு மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார்.  கடைசியாக சிவமொக்கா, தாவணகெரே, சித்ரதுர்கா, துமகூரு, ராமநகர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டிவிட்டு டில்லி  திரும்பினார்.

இந்த நிலையில் அவர் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கர்நாடகத்திற்கு வந்தார்.   பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்கிறார்.

இன்று பெங்களூரு அரண்மனை மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதிலும் ராகுல்காந்தி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

 

 

இந்த நிலையில் இன்று பெங்களூரு மாநகராட்சி சுத்திகரிப்பு  தொழிலாளர்களை சந்தித்து ராகுல்காந்தி கலந்துரையாடினார். அவர்களை நலம் விசாரித்தார். அம்பேத்கர் படத்தை திறந்துவைத்தார்.

தங்களுடன் இயல்பாக ராகுல்காந்தி கலந்துரையாடியதை, மாநகராட்சி தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் பிறரிடம் பகிர்ந்துகொண்டனர்.