சென்னை:
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்ய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தமிழகம் வர இருப்பதாக தமிழகம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் கூறி உள்ளார்.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள், தேர்தல் பிரசாரம், கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு என பரபரப்பாக சுழன்று வருகின்றன. காங்கிரஸ் கட்சி சார்பில், ஏற்கனவே தேர்தல் அறிக்கை குழு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்டு, பொதுமக்கள், தொழிலதிபர்களின் ஆலோசனைகளை கேட்டு வருகிறது.
அதைத்தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலத்திலும், ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் பணிக்குழு, பிரசார குழு, விளம்பர குழு, ஊடக தொடர்பு குழு மற்றும் நிர்வாக குழுக்கள் அமைக்கப்பட்டுவருகிறது.
அதன்படி, தமிழகத்தில் குழுக்கள் அமைப்பது தொடர்பாக கடந்த வாரம் காங்கிரஸ் மேலிட செயலாளர் சஞ்சய் தத் முன்னிலையில் ஆலோசனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து டில்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல்வாஸ்னிக் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து குழுக்கள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டன.
அதன்படி, தமிழக காங்கிர1 ஒருங்கிணைப்பு குழு முகுல்வாஸ்னிக் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் குமரிஅனந்தன், இளங்கோவன், மற்றும் ப.சிதம்பரம், தங்கபாலு, கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், மாணிக் தாகூர் உள்பட 10 பேர் பெயர் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தல் பணிக்குழுவில் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த 10 பேர் மற்றும் அகில இந்திய செயலாளர்கள் செல்லக் குமார், சி.டி.மெய்யப்பன், நடிகை குஷ்பு, ஆரூண், பீட்டர் அல்போன்ஸ், யசோதா, கோபிநாத் உள்பட 20 பேர் பெயர் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தல் பிரசார குழு தலைவர் பதவிக்கு இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விளம்பர குழுவுக்கு எச்.வசந்தகுமார், தங்கபாலு, ஆகியோரது பெயரும் தகவல் தொடர்பு குழுவுக்கு கோபண்ணா, அழகிரி, விஜய தரணி, ஆகியோரது பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதுபோல நிர்வாககுழு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இது தவிர தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, விஜயதரணி, அமெரிக்க நாராயணன், எம்.ஜோதி, இதயதுல்லா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, உள்பட 10 பேர் கொண்ட பெயர் பட்டியலும் தயாராகி இருக்கிறது.
இந்த பெயர் பட்டியல்கள் அனைத்தும் ராகுல் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் நாளை டில்லி திரும்புகிறார். அவர் ஒப்புதல் அளித்ததும் அதிகாரப்பூர்வமாக பட்டியல் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல்வாஸ்னிக், நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்ய ராகுல் காந்தி தமிழகம் வர இருப்பதாக தெரிவித்து உள்ளார். மேலும், நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் முடிவு செய்து விட்டனர் என்றும் கூறி உள்ளார்.