கவுகாத்தி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு அசாம் பாஜகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாஜக கூட்டணி ஆட்சியிலிருந்து விலகிய அசாம் கன பரிஷத் கட்சியினர், குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

கடந்த 8-ம் தேதி குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மாணவர்கள் பள்ளிகளை புறக்கணித்து போராடுகின்றனர். அசாமியர்கள் கலாச்சார அடையாளமாக திகழும் பாடகர் ஜுபீன் கார்க் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்.

ஒருபடி மேலே போய், மத்திய பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி கொண்டு வந்த குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு, அசாம் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து பொது இடங்களில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா தங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக அசாம் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதற்கிடையே, போராட்டத்தை தீவிரப்படுத்தியிருக்கும் அனைத்து அசாம் மாணவர்கள் சங்கத்தினரை, மத்திய உள்துறை அமைச்சர் ரான்நாத் சிங் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.