டில்லி:

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக  இந்திய விமானப்படையினர் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதை முதன்முதலாக வரவேற்று பாராட்டியவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான ப.சிதம்பரம், மறந்துவிட்ட பிரதமர் மோடிக்கு நினைவுபடுத்தி உள்ளார்.

கடந்த மாதம் (பிப்ரவரி) 14ந்தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா பயங்கரவாத  தற்கொலை  பயங்கரவாதியின் வெடிகுண்டு தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப் பட்டனர். இதையடுத்து இந்திய விமானப்படையினர், பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை அழித்து பயங்கரவாதிகளையும் வேட்டையாடினர்.

இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவியது. இதற்கிடையில் பாகிஸ்தான் விமானப் படையை தாக்கிய இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் சிறைபட்டு பின்னர் உலக நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இந்திய விமானப்படையினரின் தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பதை, செய்தியாளர்களின் சந்திப்பின்போது, முப்படை துணை தளபதிகள் கூற மறுத்து விட்டனர். ஆனால் பாஜகவினரோ அவர்களுக்கு ஏற்றவாறு 300 பேர் என்றும் 400 பேர் என்றும் கூறி வருகின்றனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக பா.ஜ.க, தேசிய தலைவர் அமித் ஷா. விங் கமாண்டர் அபிநந்தன் தாயகம் திரும்பியதற்கு காரணம், பிரதமர் மோடியின் பலம் என  தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சி இதில் அரசியல் செய்து வருவதாகவும் பாஜக குற்றம் சாட்டி வருகிறது.  ஆனால், இந்திய விமானப்படை தாக்குதலை பாஜக அரசியல் ஆதாயமாக மாற்றி வருகிறது.  இந்த அதிரடிக்கு காரணம் மோடி மட்டுமே என்றும் கூறி வருகிறது. பாஜக, ராணுவ நடவடிக்கை யிலும் அரசியல் ஆதாயம் தேடுகிறது  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், பாஜகவினரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,

இந்திய விமானப் படையின் வீர நடவடிக்கையைப் பாராட்டிய முதல் மனிதர் திரு ராகுல் காந்தி என்பதை பிரதமர் மோடி மறந்து விட்டார்

விமானப் படையின் துணைத் தளபதி உயிர் இழந்தோர் எண்ணிக்கை பற்றி கருத்துக் கூற மறுத்து விட்டார். 300/350 பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தியை யார் பரப்பியது?

‘இந்திய குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன். ஆனால் உலகம். நம்ப வேண்டுமே? அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில் என்ன தவறு?

இவ்வாறு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.