அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள ராகுல் காந்தி சான் ப்ரான்சிஸ்க்கோ விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் (Immigration) முன் வரிசையில் காத்திருந்து தனது வருகையை பதிவு செய்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடத் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக நேற்றிரவு அங்கு சென்ற அவர் அங்குள்ள விமான நிலையத்தில் வரிசையில் காத்திருந்து தனது வருகையை பதிவு செய்தார்.

அப்போது விமானத்தில் அவருடன் பயணம் செய்த பயணிகள் “நீங்கள் ஏன் வரிசையில் நிற்கிறீர்கள் ?” என்று கேட்டதற்கு

“நான் இப்போது எம்.பி. இல்லை நான் சாதாரண பிரஜை அதனால் வரிசையில் நிற்கிறேன்” என்று ராகுல் காந்தி கூறினார்.

ஒரு வார கால அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிந்தனையாளர்கள், இந்திய அமெரிக்கர்கள் மற்றும் வால் ஸ்ட்ரீட் நிர்வாகிகளுடன் உரையாட உள்ள ராகுல் காந்தி வாஷிங்டன் DC இல் செய்தியாளர் கூட்டம் ஒன்றிலும் பங்கேற்கிறார்.

ஜூன் 4 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள ஜாவிட்ஸ் மையத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்துடன் அவர் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்.

இந்த நிலையில் குடியேற்ற பதிவிற்காக அவர் வரிசையில் காத்திருந்தது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.