டெல்லி: கொரோனா உயிரிழப்புக்கு ரூ.4லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கொரோனா பெருந்தொற்று விஷயத்தில் குஜராத் மாநில பாஜக அரசின் முறைகேடு தொடர்பான குஜராத்  மக்களின் குமுறல் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கொரோனா உயிரிழப்புக்கு ரூ.4லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, குஜராத் மாநில அரசை கடுமையாக கண்டித்துள்ளதுடன், அதுதொடர்பான பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வீடியோவையும் வெளியிட்டு, மக்கள் படும் துன்பம் களையப்பட வேண்டும் என்று வலியுறுத்தி  உள்ளார்.

இந்தியா முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் உள்ள நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு, உயிரிழப்பு, கொரோனா தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. கொரோனா தொற்று பாதிப்பு, உயிரிழப்பு குறித்து பல மாநிலங்கள் உண்மையான தகவல்களை தெரிவிக்க மறுப்பதாகவும், தடுப்பூசி விஷயத்திலும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியிடுவதாகவும் புகார்கள் உள்ளன.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் குஜராத் மாநிலத்தில், கொரோனா உயிரிழப்பு குறித்து தவறான தகவல்கள் வெளியிடப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.  ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு குஜராத்தில் கொரோனா இறப்பு விகிதம், அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி ராகுல்காந்தி, பாஜகவை விமர்சித்துள்ளார். அப்போது  மத்திய அரசின் ஊரடங்கு தளர்வுகள், திட்டமிடாத செயல்கள் குறித்து காங்கிரஸ்  தலைவர் ராகுல்காந்தி, கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து, கொரோனா விஷயத்தில் மத்திய அரசு மெத்தனமாக நடந்துகொள்வதாகவும், உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாகவும், மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சித்து  டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.

அதுபோல தற்போது குஜராத் மாநில பாஜக அரசின் கொரோனா முறைகேடு தொடர்பாக அம்மாநில மக்களின் குமுறல் வீடியோவை பகிர்ந்து, மத்திய, மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

அந்த வீடியோவில்,  குஜராத் மாநிலத்தின், ஹிம்மத்நகர் பகுதி  பிரஜாபதி குடும்பத்தினர், அமரேலி பகுதியைச் சேர்ந்த நரேஷ்பாய் குடும்பத்தினர் உள்பட கொரோனாவால் தங்களது குடும்பத்தினரை இழந்து, அரசின் எவ்வித நிவாரணமும் இன்றி வாடும் குடும்பத்தினரின் குமுறல், அம்மாநில மக்களின் மாநில மற்றும் மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்கள் தொடர்பான வீடியோவை பகிர்ந்து, இரண்டு கேள்விகளை எழுப்பி டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில், 

கொரோனா விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு கோரிக்கைகள் உள்ளன

1. கோவிட் இறந்தவர்களின் சரியான புள்ளிவிவரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
2. கோவிட் நோயால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு நான்கு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.  மக்கள் படும் துன்பம் அரசினால் நீங்க வேண்டும். இழப்பீடு வழங்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

குஜராத் மக்களின் குமுறல் வீடியோ: