மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக சேலம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று கூட்டணி கட்சிகளி்ன் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி “தமிழ்நாட்டிற்கும் தனக்கும் உண்டான உறவு இன்று நேற்று ஏற்பட்டதல்ல” என்று நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார்.

கூட்டத்தில் முன்னதாக பேசிய வைகோ “கடந்த 2004 ம் ஆண்டு கும்பகோணத்தில் ஏற்பட்ட பள்ளி தீவிபத்தில் குழந்தைகள் இறந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ராகுல் காந்தி எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் உடனடியாக ஓடோடி வந்தார்” என்று உருக்கத்தோடு குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து பேசிய திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி “கொரோனாவுக்கு எதிராக நாம் எப்படி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கிறோமோ அதுபோல் மதவாத சக்திகளின் முயற்சிகளை தோற்கடிப்பதிலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று பேசினார்.

இவர்களை தொடர்ந்து இந்த கூட்டத்தை  தலைமை ஏற்று பேசிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், “மதவாத சக்திகளுக்கு எதிராக ராகுல் காந்தி தலைமையில் தேசிய அளவில் மதசார்பற்ற கூட்டணி அமைய வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தார்.

மேலும், “ராகுல் காந்தி அன்புள்ளத்தோடு பழகக்கூடியவர்” என்றும் “அவரை ‘சார்’ என்று அழைத்ததை அன்போடு கண்டித்து தன்னை ‘பிரதர்’ என்று அழைக்க சொல்லி அன்பு கட்டளையிட்டவர் சகோதரர் ராகுல் காந்தி” என்று அவருக்கு புகழாரம் சூட்டினார்.

நிறைவுரையாற்றிய ராகுல் காந்தி அவர்கள், “ஆர்எஸ்எஸ்-பாஜக எனும் மதவாத சக்திக்கு பணபலமும் போதுமான ஆள் பலமும் உள்ளது எந்த ரூபத்திலும் எப்பொழுது வேண்டுமானாலும் தமிழகத்தில் நுழைவதற்கு முயற்சித்து வருகிறது தற்போது அதிமுக எனும் முகமூடி அணிந்து இங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழக மக்கள் அன்புள்ளம் கொண்ட மக்கள், தான் சிறிதளவு நேசித்தால் தன்மேல் மலைபோல் பாசம் வைக்ககூடியவர்கள் தமிழர்கள் என்பதை, இந்திரா காந்தி காலம் தொட்டு நான் உணர்ந்திருக்கிறேன்.

அந்த அன்பையும் சகோதரத்துவத்தையும் மதவாத சக்திகள் சூழ்ச்சியால் வீழ்த்த காத்திருக்கிறது, இந்த ஆபத்தை உணர்ந்து தமிழக மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

தேர்தலுக்கு பின் அதிமுகவின் முகமூடி விலகும்போது தான் மதவாத சக்திகளின் உண்மையான முகம் அனைவருக்கும் தெரியவரும்.

அந்த மதவாத சக்திகளை தோற்கடிக்க மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹருல்லா, கொங்கு தேச மக்கள் கட்சியின் ஈஸ்வரன் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் உரையாற்றினார்கள்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் துணை தலைவர் வாழப்பாடி இராம. சுகந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.