சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் அதிக அளவிலான வேட்பாளர்கள் உள்ளதால்,  அந்த தொகுதிக்கு மட்டும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 3 வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை ரிப்பன் மாளிகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான சட்டமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்  நேற்று நடைபெற்றது. இதில் சென்னை  மாநகர ஆணையரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி பிரகாஷ் , மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் மற்றும் அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை பொதுமக்கள்  1950 மற்றும் 18004257012 எண்ணில் தெரிவிக்கலாம். சி விஜில் செயலியை தரவிறக்கம் செய்து புகைப்படமாக புகார் அளிக்கலாம் என்றார்.
மேலும், கொளத்தூர் தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அதிக மின்னணு வாக்குப் பதிவு எந்தரங்கள் தேவைப்படுகிறது. கொளத்தூர் தொகுதியில் ஒவ்வொரு வாக்குக்சாவடிக்கும் தலா  3 எந்திரம் தேவைப்படுகிறது. அதே நேரத்தில்  தியாகராய நகர் தொகுதியில்  ஒரே ஒரு எந்திரம் மட்டுமே பயன்படுத்தபட உள்ளது என்றார்.
கொளத்தூர் தொகுதியில் மட்டும் 36 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 16 பேர் அரசியல் கட்சிகளின் பெயர்களிலும், 16 பேர் சுயேச்சையாகவும் களமிறங்கி உள்ளனர்.