நாகர்கோவில்: செப்டம்பர் 7ந்தேதி மாலை குமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல்காந்தி மற்றும் அவருடன் செல்பவர்களின் அடிப்படை வசதிகளுக்காக, குளிர்சாதன வசதிகள் கொண்ட 60 கேரவன் வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.  இந்த கேரவன்களில், ஏசி படுக்கையறை,  சமையலறை கழிவறை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

மக்களிடையே  ஒற்றுமையை வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், நாட்டு மக்களிடையே காங்கிரஸ் கட்சிக்கு புத்துணவை ஊட்டவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 150 நாட்கள் குமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்கிறார். அவரது பாத யாத்திரை, வருகிற 7-ந்தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் இருந்து தொடங்கப்பட உள்ளது. ராகல் நடை பயணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி தொடங்கி வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பந்தலுக்கு நடந்தே செல்கிறார். அங்கு நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பிறகு அவர் நடை பயணத்தை தொடங்குகிறார். இரவு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரியில் தங்குகிறார்.

ராகுல் காந்தியும் அவருடன் பாத யாத்திரை செல்லும் காங்கிரஸ் தலைவர்களும் தங்குவதற்காக படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிவறை மற்றும் அனைத்து வசதிகள் கொண்ட குளுகுளு வசதியுடன் கூடிய கேரவன்கள் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக 60 கேரவன்கள் கன்னியாகுமரிக்கு வந்து உள்ளது.

இந்த 60 கேரவன்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை செல்லும் போது அவர்களை பின் தொடர்ந்து செல்லும் என்றும், யாத்திரையின்போது, மதிய இடைவேளை மற்றும் இரவு தங்கும் இடங்களில் நிறுத்தி, ராகுல்காந்தி மற்றும் அவருடன் செல்பவர்கள் தங்குவதற்கும், அடிப்படை தேவைகளுக்கும் பயன்படுத்தம் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.