மணிப்பூர் மாநிலத்தில் இரண்டாவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இன்று அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கி-யை சந்தித்து பேசினார்.

மணிப்பூர் கலவரம் குறித்தும் அம்மாநிலத்தில் நடந்து வரும் நிகழ்வுகள் குறித்தும் நேரில் ஆய்வு செய்ய நேற்று இம்பால் வந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

சாலை வழியாக பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களின் நிலையை அறிய விரும்பிய அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை ஹெலிகாப்டர் மூலம் பயணம் செய்யக் கூறி திருப்பி அனுப்பினர்.

இன்று இம்பாலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மொய்ரங் சென்ற ராகுல் காந்தி அங்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களைச் சந்தித்து அங்கு நிலவி வரும் சூழல் குறித்து கேட்டறிந்தார்.

ராகுல் காந்தியுடன் மணிப்பூர் முன்னாள் முதல்வர் உக்ரம் இபோபி சிங், அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் சென்றனர்.

இதனையடுத்து தலைநகர் இம்பால் திரும்பிய ராகுல் காந்தி ஆளுநர் அனுசுயா உய்கி-யை சந்தித்து மணிப்பூர் கலவரம் குறித்தும் அம்மாநில மக்கள் மீண்டும் நல்லுறவுடன் அமைதியாக வாழ தேவையான நடவடிக்கை குறித்தும் விவாதித்தார்.