திருவனந்தபுரம்

வயநாடு மக்களவை உறுப்பினரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி கேரள மாநிலத்தின் வெள்ளப்பகுதிகளை பார்வையிட உள்ளார்.

கேரளாவில் பெய்து வரும் கனம்ழை காரணமாக கடும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரளா செல்லும் 14 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவை சென்னையில் இருந்து மங்களூரு, ஆலப்புழா செல்லும் ரெயில்கள், திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூரு மாவேலி, மற்றும் மங்களூரு மலபார், உள்ளிட்ட ரெயில்களும்,  ஆலப்புழா – கன்னுர், எர்ணாகுளம் – நிஜாமுதீன், எர்ணாகுளம் – காரைக்கால், எர்ணாகுளம் – பாட்னா ரயில்களும் ரத்து செய்யப்பட்டது.

பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தாழ்வான பகுதிகலில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். முன்னாள் காங்கிரஸ் தலைவரும் கேரள மாநில வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தொலைபேசியில் பிரதமர் மோடியிடம் மழையால் பாதிக்கப்பட்டுள்ள தனது வயநாடு நாடாளுமன்ற தொகுதி உட்பட, கேரள மாநில மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்ய வேண்டும் வற்புறுத்தி உள்ளார்.

மேலும் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். குறிப்பாக வயநாடு தொகுதி மக்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான எந்த உதவியாக இருந்தாலும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் ” என பதிந்துள்ளார்.

இன்று வயநாடு உள்ளிட்ட கேரள மாநிலத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் காண ராகுல் காந்தி கேரளாவுக்கு செல்கிறார்.  இன்று மாலையில், கோழிக்கோடு வரும் ராகுல் காந்தி மலப்புரம் கலெக்டர் அலுவலகத்தில்  மீட்பு பணிகள் குறித்த ஆலாேசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.   அத்துடன் நாளை வயநாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிடுகிறார்.