ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலத்தில் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு  கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் விதி என் 370 நீக்கப்பட்டதை அடுத்துக் கடந்த ஐந்தாம் தேதி முதல் மாநிலத்தின் பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அத்துடன் தொலைபேசி மற்றும் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.    எல்லா இடங்களிலும் பலமான ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.   ஆனால் எந்த இடத்திலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழாமல் இருந்தன.

இதையொட்டி ஜம்மு, கத்துவா, சம்பா, உதம்பூர், மற்றும் நியாசி ஆகிய 5 மாவட்டங்களில் 144 உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.  மக்கள் வெள்ளிக்கிழமை தொழுகையை அச்சமின்றி நடத்தினர்.  இயல்பு நிலை திரும்பியதால் வணிக வளாகங்கள் திறக்கப்பட்டு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.   நாளை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் தினமாகும்.  முக்கியமான இடங்களில் ஆயுதம் ஏந்திய காவலர் கண்காணிப்பு பணியில் உள்ளனர்.

நாளை பக்ரீத் பண்டிகை என்பதால் நேற்று இரவு முதல் மாநிலம் எங்கும் சிறிது சிறிதாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.  பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு துணிமணி உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் கடைவீதிகளுக்கு மக்கள் பெருமளவில் வந்துள்ளனர்.   உணவுப் பொருட்கள் மற்றும் இறைச்சிக் கடையில் கூட்டம் அலைமோதுகிறது.

இணையச் சேவை இன்னும் துண்டிக்கப்பட்டுள்ளதால் வாய் வழியாகப் பல வதந்திகள் பரப்பப்படுகின்றன. தற்போது காஷ்மீரில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மக்களிடம் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.  மேலும் அவர் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என உறுதி அளித்துள்ளார்.