டில்லி

ந்தியாவில் தினசரி 69 லட்சம் தடுப்பூசிகள் பற்றாக்குறை உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் பிரதமர் மோடி மன் கி பாத் என்னும் வானொலி நிகழ்வின் மூலம் மக்களுடன் உரையாடி வருகிறார். சமீபத்திய மன் கி பாத் நிகழ்ச்சி உள்ளிட்ட அனைத்திலும் தவறான தகவல்களை அவர் அளிப்பதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குறை கூறி வருகின்றன.   குறிப்பாக அவர் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை பற்றிச் சரியான தகவல்கள் தெரிவிப்பதில்லை என்பதே முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பிரதமர் மோடி நாட்டின் ‘மன்கிபாத்’ (மனதின் குரல்) என்ன என்பதைப் புரிந்து கொண்டிருந்தால், இதுபோன்று தடுப்பூசிகளின் நிலை இருந்திருக்காது. அரசு வரும் டிசம்பருக்குள் 60 சதவீத மக்களுக்கு 2  டோஸ் தடுப்பூசி போடுவதை இலக்காகக் கொண்டுள்ளது.

அதாவது ஒரு நாளைக்குத் தேவையான தடுப்பூசி 93 லட்சம் ஆகும் என்னும் நிலையில் கடந்த 7 நாட்களில் ஒரு நாளைக்குச் சராசரியாக 36 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டு வருகின்றன. அதாவது கடந்த 7 நாட்களில் தினசரி 56 லட்சம் தடுப்பூசிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  கடந்த  24ம் தேதிக்கு முந்தைய 24 மணி நேரத்தில் ஒரு நாளைக்கு 23 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளது. அப்போது தினசரி 69 லட்சம் தடுப்பூசிக்குப் பற்றாக்குறை இருந்தது,’ எனப் பதிந்துள்ளார்.

தவிர தடுப்பூசியின் மெதுவான வேக விகிதம் மற்றும் நாடு முழுவதும் மக்களுக்குத் தடுப்பூசிகள் கிடைக்காத ஊடக அறிக்கைகள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் வீடியோவையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.