டெல்லி

காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்தி புதிய தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர்ர் ராஜீவ் குமாருக்கு 65 வயது நிரம்பியதால் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) பணி ஓய்வு பெறுகிறார்.  புதிய தலைமை தேர்தல் கமிஷனரை தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இக்குழுவில் உறுப்பினராக உள்ள உள்துறை மந்திரி அமித்ஷா, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய தலைமை தேர்தல் கமிஷனர் பதவிக்கு 5 பேர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, அதில் ஞானேஷ்குமார் பெயர் இறுதி செய்யப்பட்டதாகவும், அது தொடர்பான பரிந்துரையை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பப்பட்டதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. குழிவின் பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, புதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஷ்குமாரை நியமித்து இதற்கான உத்தரவை நேற்றிரவு பிறப்பித்தார்

ராகுல் காந்தி இது குறித்து எக்ஸ் தளத்தில்

”பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற தேர்தல் கமிஷனரை தேர்வு செய்யும் கூட்டத்தில் எனது எதிர்ப்பை பதிவு செய்தேன். தேர்தல் ஆணையத்தின் அடிப்படை அம்சமே, எந்த தலையீடும் இல்லாமல் சுதந்திரமான முறையில் தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று செயல்முறையாகும். சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி தலைமை நீதிபதியை நீக்கியதன் மூலம், நமது தேர்தல் செயல்முறையின் நேர்மை குறித்த கோடிக்கணக்கான வாக்காளர்களின் கவலையை அதிகப்படுத்தி உள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அம்பேத்கர் மற்றும் நமது நாட்டை தோற்றுவித்த தலைவர்களின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கு அரசை பொறுப்பு ஏற்க வைப்பது நமது கடமையாகும். தேர்தல் கமிஷனர் நியமனம் தொடர்பான குழுவின் அமைப்பு மற்றும் செயல்முறைக்கு எதிரான வழக்கு இன்னும் 48 மணி நேரத்தில் விசாரணை நடைபெற உள்ள நிலையில், நள்ளிரவில் பிரதமர் மோடியும், உள்துறை மந்திரியும் புதிய தலைமை தேர்தல் கமிஷனர் நியமனத்திற்காக முடிவு எடுத்தது அவமரியாதைக்குரியது மற்றும் மரியாதையற்றது”

என்று பதிவிட்டுள்ளார்.