உ.பி. மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் 45 நாட்களுக்கு மகாகும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் இருந்து இதுவரை சுமார் 53 கோடிக்கும் அதிகமானோர் கங்கை, யமுனை, சரஸ்வதி நிதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி தங்கள் பாவத்தை போக்கியுள்ளனர்.
பிப்ரவரி 26ம் தேதி மகா சிவராத்திரி அன்று நிறைவுபெற உள்ள இந்த மகாகும்பமேளா நிகழ்வில் மொத்தம் 65 கோடிக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்திரி மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நீரை நாடு முழுவதும் தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட இந்த நீரை 250 மி.லி. பாட்டில்களில் அடைத்து ரூ. 30க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கங்கா ஜல் என்று பெயரிடப்பட்டுள்ள இதனை சுப நிகழ்ச்சிகள், தொழில் தொடங்குதல், புதுமனைப்புகுதல் போன்ற தேவைகளுக்கு பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் இந்த கங்கை நீர் பாட்டில்களின் சிறப்பு விற்பனை தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் தலைமை அஞ்சலகங்களில் நடைபெற்று வருகிறது.