டில்லி

குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராய சாவு குறித்து பாஜகவைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகத் சாடி உள்ளார்.

 

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் போதாட் மாவட்டத்தில் உள்ள ரோஜித் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பலர் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பலனின்றி கொத்துக்குத்தாக உயிரிழந்தனர். பாவ்நகா், போதாட், அகமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் மேலும் 97 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இச்சம்பவம் தொடர்பாக, பா்வாலா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையைக் குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவும், அகமதாபாத் குற்றத் தடுப்புப் பிரிவும் இணைந்து தொடங்கியுள்ளன. இங்கு உயிரிழந்தவர்கள், மெத்தனாலை குடித்திருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.  இதுவரை கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.  அந்த பதிவில்,

”இந்தியாவில் வறண்ட மாநிலமான குஜராத்தில், கள்ளச்சாராயம் குடித்ததால் பல குடும்பங்கள் அழிந்துவிட்டன, அம்மாநிலத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள போதைப்பொருள்கள் தொடர்ந்து கைப்பற்றப்படுகின்றான்.

மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோர் பிறந்த மண்ணில், கண்மூடித்தனமாகப் போதை வியாபாரம் செய்யும் இவர்கள் யார்? என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது, இத்தகைய மாபியா கும்பலுக்கு எந்த ஆளும் சக்திகள் பாதுகாப்பு அளிக்கின்றன?”

என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.