டெல்லி: ராகுல் தகுதி நீக்கம் விவகாரம் தொடர்பாக, வரும் 12ந்தேதி நாடு முழுவதும்  அமைதிப் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.

மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராகுல் காந்தி மீதான வழக்கில், அவருக்கு இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டு,  மக்களவை செயலகத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதை கண்டித்து, நாடு முழுவதும் வரும் 12ந்தேதி  ஒரு நாள் அமைதிப் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற  தேர்தலில் பிரச்சாரத்தின் போது எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்று முடிவது ஏன் என்று, ராகுல் விமர்சனம் சய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குஜராத்தை சேர்ந்த மோடி என்ற சமூகத்தை சேர்ந்தவர்,   சூரத் பெருநகர  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதன் காரணமாக, ராகுலின்  மக்களவை உறுப்பினர் பதவி பறி போனது. அவரது எம்.பி. பதவி மக்களவை செயலகத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.  இதை கண்டித்து நேற்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

இநத் நிலையில்,  மக்களவையில் இருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த மோடி அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மாநில பிரிவுகள் வரும் 12ந்தேதி (புதன்கிழமை) ஒரு நாள்  மவுனப்போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. ராகுல்,  மோடிக்கும் கௌதம் அதானிக்கும் இடையேயான உறவை அம்பலப்படுத்தியதற்காக, பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவும் அவரை பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன என்று குற்றம் சாட்டி உள்ளது,

ராகுலின் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரிய மேல்முறையீட்டை குஜராத் உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில், மத்திய பாஜக அரசை கண்டித்து,  ஜூலை 12-ம் தேதி காலை முதல் மாலை வரை அனைத்து மாநில தலைமைச் செயலகங்களிலும் உள்ள காந்தி சிலைகள் முன்பு கட்சிப் பிரிவுகள் முற்றுகைப் போராட்டம் நடத்தும். இந்தப் போராட்டத்திற்கு அதிகபட்சமாக அணிதிரள வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கேட்டுக் கொண்டுள்ளார்.