டெல்லி: ராகுல் காந்தி ‘பப்பு’ அல்ல கெட்டிக்காரர், அவர் ஸ்மார்ட் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் குட் சர்டிபிகேட் அளித்துள்ளார்.

பொருளாதார நிபுணரான இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான ரகுராம் ராஜன் கடந்த 2007-08 ஆம் வருடம் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடியையே சாமர்த்தியமாக சமாளித்து பல ஆலோசனைகளை அளித்தவர். ஆனால், மோடி தலைமையிலான பாஜக அரசுக்கும் அவருக்கும் ஒத்துப்போகாத நிலையில், கடந்த 2016 ஆம் வருடம் செப்டம்பர்  மாதம், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர்  பிறகு சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிந்துள்ளார்.  மத்தியஅரசின் வங்கிகள் தனியார் மயமாக்கல் உள்பட பல்வேறு  நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுத்ததால், தனது பதவியை ராஜினாமா  செய்தார். தற்போது, தமிழ்நாடு அரசின் பொருளாதார குழுவில் இணைந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றி வருகிறார்.

இவர் ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். கடந்த மாதம் ராகுல் யாத்திரை ராஜஸ்தானில் நடைபெற்றபோது,  அதில் கலந்து கொண்டு ராகுல் காந்திக்கு ஆதரவுக்கரம் நீட்டியதுடன், அவருடன் சிறிது தூரம் நடைபயணமும் மேற்கொண்டார்.

இந்த நிலையில்,  டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்ற வந்திருந்த  ரகுராம் ராஜன்,  தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், “வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி சிலர் கூறுவதுபோல், ‘பப்பு’ (குழந்தை) அல்ல, அவர் கெட்டிக்காரர், சாதுர்யமானவர். சுறுசுறுப்பாகச் செயல்படக்கூடியவர்” என்று  புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தவர், “ராகுல் மற்றும் அவரது குடும்பத்துடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. அவருடன் பலமுறை நான் பேசியிருக்கிறேன். ஆனாலும், முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுலை சிலர் ஒன்றும் அறியாதவர் (பப்பு) என்று கூறிவருகின்றனர். இது துரதிஷ்டவசமானது என் கூறினார்.

ராகுல்காந்தி, தான் நடத்தி வரும் ஒற்றுமை யாத்திரை எதற்கு என்பது குறித்து மக்களிடம் தெளிவாகக் கூறியுள்ளார். இளைஞர்கள் முதல் விவசாயிகள் வரை அனைவரையும் நேரில் சந்தித்து மக்கள் பிரச்னைகளைக் கேட்டு அறிந்து கொண்டுள்ளார். மக்களும் அவரைப் புரிந்துகொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலான வர்கள் நினைப்பது போல் அவர் ஒன்றும் அறியாதவர் அல்ல. அவருக்கு எல்லாம் தெரியும், எதை எப்போது செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை நன்கு அறிந்தவர் ராகுல் காந்தி.

2023ஆம் ஆண்டு இந்தியா பெரும் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். மத்தியஅரசு உஷாராக செயல்படாவிட்டால் அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். வளர்ச்சிக்கான சீர்திருத்தங்களை செய்ய மத்திய அரசு தவறிவிட்டது.

பொருளாதார வளர்ச்சியில் சீனாவை இந்தியா முந்திவிடும் என்று இப்போதே கணிப்பது சரியாக இருக்காது. ஆனாலும், பொருளாதார வளர்ச்சியில் இந்தியா உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளதால் மேலும் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

ராகுல்காந்தியை, பாஜகவினர் பப்பு என்று அழைத்து வருகின்றனர்.  இந்தியில் ‘பப்பு’ என்றால் சிறுவன் என்று பொருள். ராகுல்காந்தி முதிர்ச்சியற்றவர் என்பதை சுட்டிக்காட்டும் வகையில், பப்பு என்ற வார்த்தையில் அவரை விமர்சித்து வருகின்றனர். இதுதொடர்பாக  சமீபத்தில் நடைபெற்று முடிந்த குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கிரஸ் கட்சி பாஜகமீது  குற்றஞ்சாட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. அதைத்தொடர்ந்து பப்பு என்றவார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையமும் தடை விதித்திருந்தது இருந்தாலும்  ‘பப்பு’ என்ற வார்த்தை  பேசும் பொருளாகியுள்ளது.

பப்பு என்று அழைப்பது குறித்து ராகுல்காந்தியும் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார்.  மும்பையில் பாரத் ஜோடா யாத்திரையின்போது கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த  ராகுல்காந்தி, “என்னை பப்பு என அழைப்பதை மோசமாக உணரவில்லை. அது அவர்களின் இதயத்தில் உள்ள பயத்தை காட்டுகிறது. அவர்கள் மகிழ்ச்சியற்று உள்ளனர். என்னை பல பெயர்களில் அழைப்பதை நான் வரவேற்கிறேன். இதனை நான் நன்றாக உணர்கிறேன். தயவுசெய்து எனது பெயரை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள். எனது பாட்டி இந்திராகாந்தி, இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படுவதற்கு முன்பு அவர் ‘குங்கி குடியா’ என்று அழைக்கப்பட்டார். 24 மணி நேரமும் என்னை தாக்கும் அதே நபர்கள் எனது பாட்டியை ‘குங்கிகுடியா’ என்று அழைத்தார்கள். திடீரென்று ‘குங்கிகுடியா’ இரும்பு பெண்மணி ஆனார். அவர் எப்போதும் இரும்பு பெண்மணியாகவே இருந்தார். எனவே, என்னை என்ன வேண்டுமானாலும் அழைக்கலாம். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை” என ஸ்மார்டாக பதில் கூறியது குறிப்பிடத்தக்கது.