டில்லி

முன்னாள் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மறைவுக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் டில்லி முதல்வருமான ஷீலா தீட்சித் நேற்று மரணம் அடைந்தார். இவர் கடந்த 1998 முதல் தொடர்ந்து 15 ஆண்டுகள் டில்லி முதல்வராகப் பணி ஆற்றியவர் ஆவார். கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை கேரள மாநில ஆளுநராகப் பதவி வகித்த இவர் நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இவர் மரணம் குறித்து ராகுல் காந்தி, “ஷீலா தீட்சித் அவர்கள் மரணச் செய்தி கேட்டு நான் மிகவும் துக்கம் அடைந்தேன். அவர் காங்கிரஸ் கட்சியின் மகள் ஆவார். அவருடன் நான் ஒரு நல்ல நட்பு வைத்திருந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், டில்லி மக்களுக்கும் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மூன்று முறை முதல்வராக இருந்து டில்லி மக்களுக்கு அரும் தொண்டாற்றியவர்” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.

தற்போது உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம், “ஷீலா தீட்சித் காங்கிரஸின் மிக உயர்ந்த தலைவர். அவருடைய க்ட்சிப்பணி, அரசியல் பணி, மற்றும் நாட்டுப் பணி, குறிப்பாக டில்லி மக்களுக்கு அவர் ஆற்றிய பணி என்றும் மறக்க முடியாது” எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு அவர் டிவிட்டரில், “ஷீலா தீட்சித் அவர்கள் தனது பல வருட ஆளுமை, மற்றும் டில்லி முன்னேற்றத்துக்கு ஆற்றிய தொண்டு ஆகியவற்றுக்காக என்றும் நினைவு கோரப்படுவார். நான் அவருடைய சிறப்பான அறிவுரைகள், அவர் அழகு புன்னகை மற்றும் அன்பு அரவணைப்பை இழந்துள்ளேன்” என பதிந்துள்ளார்.