புதுடெல்லி: தம்பதிகளின் விவாகரத்திற்குப் பின்னர், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள், தொடர்ந்து பெற்றோர்களின் கூட்டுப் பொறுப்பிலேயே விடப்படுவது குறித்த பொதுநல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதுதொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

“சேவ் சைல்டு இந்தியா ஃபவுண்டேஷன்” எனும் அமைப்பு, இதுதொடர்பாக ஒரு பொதுநல வழக்கைத் தொடர்ந்தது. பெற்றோர்களின் பிரிவுக்குப் பின்னர், அதுவரை பெற்றோர்களின் இணைந்த கவனிப்பில் இருந்த குழந்தைகள், பின்னர், தாய் அல்லது தந்தை ஆகிய யாரேனும் ஒருவரின் தனி கவனிப்பில் மட்டுமே இருக்க வேண்டிய சூழலில், பல்வேறு மனநல பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்.

எனவே, தம்பதிகளின் பிரிவிற்கு பின்னரும், பெற்றோர்களின் கூட்டு கவனிப்பில் குழந்தைகள் இருக்க வகைசெய்ய வலியிறுத்தி இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், இந்த வழக்கை தொடக்கத்தில் விசாரிக்க தயக்கம் காட்டியது உச்சநீதிமன்றம். ஏனெனில், சட்டம் இயற்றும் இடம் நாடாளுமன்றமே தவிர, நீதிமன்றம் அல்ல என்ற அடிப்படையில் அந்த தயக்கம் ஏற்பட்டாலும், பின்னர் மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்டு, மத்திய அரசுக்கு இதுதொடர்பான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.