டில்லி:

கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி வந்துள்ளார்.

அங்கு அவரிடம், புயல் காரணமாக  பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் சோகங்களை அழுதுகொண்டே கூறினர். அதை கேட்டு  ராகுல்காந்தி கண்கலங்கினார்.

குமரி மாவட்டத்துக்கு ஓபு புயல் பாதிப்புகளை பார்வையிட வந்துள்ள ராகுல்காந்தி,  அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். ஓகி புயல் காணமாக கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் இன்னும் திரும்பாத நிலையில், அந்த மீனவர்கள் குடும்பத்தினரை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கினார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு  வங்கக்கடலில் உருவான ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது.

மத்திய மாநில அரசுகள் புயல் குறித்து மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்காததால்,  கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். பலர் வெளி மாநிலங்களில் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும்  600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை.

தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக இந்திய கடற்படையினர் கூறி வருகின்றனர். மீனவர்களை எதிர்பார்த்து அவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய  தலைவராக தேர்வு பெற்றுள்ள ராகுல்காந்தி முதன் முறையாக வெளி மாநில சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

கடந்த சில மாதங்களாக குஜராத் தேர்தலில் பம்பரமாக சுழன்று தேர்தல் பிரசாரம் செய்த ராகுல், அங்கு நேற்று முன்தினத்துடன் பிரசாரம் முடிவடைந்த நிலையில் இன்று கன்னியாகுமரி வருகை புரிந்துள்ளார்.

ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் துன்பப்படுவதை கண்ட ராகுல்காந்தி, அவர்களுக்கு ஆறுதல் கூற குமரி மாவட்டம் வந்துள்ளார். அதற்காக  இன்று காலை டில்லியில் இருந்து புறப்பட்ட அவர் காலை  10.30 மணி அளவில்  திருவனந்தபுரம்  வந்தடைந்தார். அங்கிருந்து  கார் மூலம் கன்னியாகுமரி வருகை புரிந்தார்.

திருவனந்தபுரத்திலிருந்து தூத்தூர் வழியாக சின்னத்துறை பகுதிக்கு வந்துள்ள ராகுல், அந்த பகுதிகளில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை கண்டு வேதனை அடைந்தார்.

தூத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீனவ மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.  ராகுலை கண்ட அந்த பகுதி மக்கள் தங்கள் சோகங்களை கூறி அழுதனர்.  தங்களை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ள வில்ல என்றும், காணாமல் போன மீனவர்கள் மீட்க உதவுங்கள் என்றும் அவர்கள் ராகுலிடம் முறையிட்டனர்.

பொதுமக்களின் சோகத்தை கேட்ட ராகுலும் மனம் கலங்கினார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய ராகுல்,  இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உதவுவதாகவும் கூறினார்.

ராகுல் காந்தியின் எளிமையான மற்றும்  கரிசனமான  விசாரிப்பு அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ராகுல்காந்தி வருகையை தொடர்ந்து கடலோர கிராமங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

 

.