லக்னோ :

ன்று உ.பி. மாநிலம் ரேபரேலி தொகுதிக்குச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ரயில்வே தொழிற்சாலை ஊழியர்களை சந்தித்து பேசினார்.

மோடி தலைமையிலான பாஜக அரசு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ரயில்வே துறையின் பல்வேறு ரயில் நிலையங்களை தனியாரிடம் பராமரிப்பு பணிக்காக கொடுத்துள்ள நிலையில், ரயில்வேத் துறைக்குச் சொந்தமான தொழிற்சாலைகளையும் தனியாரிடம் கொடுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்தியன் ரயில்வேக்கு  நாடு முழுவதும்  7 ரெயில்பெட்டி தொழிற்சாலைகள் உள்ள நிலையில், அதை தனியார் மயமாக்க மத்தியஅரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு ரயில்வே ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உ.பி. மாநிலம் லால்கன்ஜ்ஜில் உள்ள  ரெயில் பெட்டி தொழிற்சாலை மற்றும் அத்தோடு இணைந்துள்ள பணிமனை ஊழியர்கள், மத்திய அரசின் தனியார்மயமாக்கல் உத்தரவுக்கு எதிராக போர்க்கொடித் தூக்கி உள்ளனர். அங்கு மத்தியஅரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

ரயில்வே ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காகாந்தி இன்று ரேபரேலி சென்றார். அங்கு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள ரயில்வே ஊழியர்களை சந்தித்து பேசினார். அவர்களுடன் பிரியங்காவும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது ரயில்வே ஊழியர்கள் தங்களது கோரிக்கை குறித்து பிரியங்காவிடம் மனு கொடுத்தனர்.