மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக தேர்தல்  வாக்குறுதியின் போது கப்பலூர் சுங்கச்சாவடி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அது அகற்றப்பட வில்லை. இதைத்தொடர்ந்து,  கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் சுங்கச்சாவடி அருகே திடீரென உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு முறையாக அனுமதி பெறவில்லை என காவல்துறை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். எம்எல்ஏ அய்யப்பன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

உதயகுமார் கைதுக்கு அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  கண்டனம் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், கடந்த அம்மா அரசில் பொதுமக்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும், விவசாயிகளுக்கும் எந்தவித பாதிப்புமின்றி செயல்பட்டு வந்த மதுரை கப்பலூர் சுங்க சாவடி தற்போது அனைத்து தரப்பினருக்கும் இடையூறாக செயல்பட்டுவரும் நிலையில் அதனை அகற்ற கோரி,அமைதியான முறையில் போராடிய முன்னாள் அமைச்சர்,திருமங்கலம் சட்டமன்றஉறுப்பினர், திரு. ஆர்.பி. உதயகுமார் அவர்களையும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.அய்யப்பன் அவர்களையும், கைது செய்த இந்த விடியா அரசை கண்டிக்கிறேன். திரு.உதயகுமார் அவர்களிடத்தில் திமுக அரசின் அடக்குமுறை செயல்கள் குறித்து தொலைபேசியில் விசாரித்தேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.