சென்னை:
நீட் போன்ற விவகாரங்களில் பாஜகவுக்கு ஆதரவாக கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, நாடாளுமன்ற தேர்தலில் தனது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அது கிடைக்காத நிலையில், கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இதன் காரணமாக அவர் திமுக கூட்டணிக்கு தாவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணிகள் அமைக்கும் வேளையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி வருகின்றன.
அதிமுக தலைமையின்கீழ் பாஜக ஆதரவுடன் மெகா கூட்டணி அமைக்கப்படும் என கூறி வந்த நிலையில், அதிமுகவுடன் பாஜக, பாமக மட்டுமே அதிகாரப்பூர்வமாக கூட்டணி வைத்துள்ளது. கூட்டணியில் சேரும் என எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, த.மா.கா, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இதுவரை கூட்டணியில் சேருவது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவித தகவலையும் தெரிவிக்க வில்லை.
இந்த நிலையில், அதிமுக பாஜக கூட்டணியில் புதிய தமிழகம் சேருவது குறித்து, இதுவரை அதிமுகவில் இருந்து யாரும் பேச முன்வரவில்லை. பாஜக சார்பிலும் புதிய தமிழகத்துக்கு சீட் கொடுக்க அதிமுகவுக்கு எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தனது மகன், மகளுக்கு பதவி கேட்டதாக கூறப்படுகிறது. கிருஷ்ணசாமியின் கோரிக்கையை ஏற்க அதிமுக மற்றும் பாஜக மறுத்துவிட்ட நிலையில் கிருஷ்ணசாமி அதிருப்தியுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, ‘அதிமுக பாஜக கூட்டணி எங்களை புறக்கணித்தால் அதற்கான விலையை கொடுக்க நேரிடும்” என்று கூறி உள்ளார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் தேவேந்திர குல வேளாளர்கள் என்று அரசுப்பட்டியலில் பெயர் மாற்றம் செய்யபடும் என்று ஸ்டாலின் கூறியதையும் கிருஷ்ண சாமி வரவேற்றுள்ளார்.
கிருஷ்ணசாமியின் திடீர் திமுக மீதான கரிசனம், அவர் திமுக கூட்டணியில் ஐக்கியமாக சாத்தியக் கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.