திமுக பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதை தொடர்ந்து கட்சியின் முக்கிய பிரபலங்கள், தொடர்ந்து பாமக கட்சியில் இருந்து வெளியேறி திமுக உள்பட மாற்றுக்கட்சியில் இணைந்து வருகின்றனர்.

பாமக – அதிமுக கூட்டணி கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், காடு வெட்டி குரு மறைவுக்கு பிறகு, ராமதாஸ் மீது கடும் கோபத்தில் உள்ள குரு குடும்பத்தினர் உள்பட பாமகவினர் நாடாளுமன்ற தேர்தலின்போது, பாமக, அதிமுக கூட்டணிக்கு எதிராக களமிறங்கி வேலை செய்வார்கள் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக பாமக மட்டுமல்லாது அதிமுகவும்  அரண்டு போய் உள்ளது.

இதற்கிடையில், அதிமுகவுடன் கூட்டணி ஏன் என்பது குறித்த  செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், அதற்கு காரணமாக பல்வேறு விளக்கங்களை தெரிவித்துள்ளார். ஆனால், அவரது விளக்கத்தை பாமகவினர் ஏற்க தயாராகவில்லை.

இந்த நிலையில், ஏற்கனவே பாமகவில் இருந்து நீக்கப்பட்ட காடு வெட்டி குருவின் தீவிர விசுவாசி யான விஜிகே மணி  பாமகவுக்கு எதிராக அணி திரட்டி வருகிறார். ‘மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்க அமைப்பு என்ற பெயரில் தனி அமைப்பு ஏற்படுத்தி வன்னியர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

ஏற்கனவே பாமகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக  பிரிந்து சென்ற வேல்முருகன் தனி அணியாக பாமகவின் ஓட்டுக்களை பிரித்து வரும் நிலையில், தற்போது ஜிகேமணியும் களமிறங்கி உள்ளதால், பாமக கலகலத்து போய் உள்ளது.

ஏற்கனவே காடுவெட்டி குருவின் மரணத்துக்கு காரணம் ராமதாஸ் என்று பகிரங்கமாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், நாடாளுமன்ற தேர்தலில், பாமகவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருவதால் பாமகவில் மட்டுமல்லாது அதிமுக, பாஜக கட்சிகளிடையேயும்  சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.

குறிப்பாக வன்னியர் பெல்ட் எனப்படும்,  அரியலூர், கடலூர், பெரம்பலூர், சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் போன்ற  மாவட்டங்களில், காடுவெட்டி குருவுக்கு தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. சமீப காலமாக பாமகவுக்கு எதிராக குருவின் தாயார் உள்பட அனைவரும் அதிரடியான கருத்துக்களை தெரிவித்து வருவதால், வன்னியர் சங்க அறக்கட்டளை நிர்வாகத்தில் இருந்து குருவின் குடும்பத்தி னரை வெளியேற்ற ராமதாஸ் முயற்சி  மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக, கடும் கோபத்தில் உள்ள  காடுவெட்டி குருவின்  மகன் கனலரசன், சமீபத்தில் மயிலாடுதுறையில் விஜிகே மணி  தலைமையில் நடைபெற்ற வன்னியர் சங்க கூட்டத்தில் பேசும்போது, ‘‘உலகில் உள்ள வன்னியர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து புதிய வன்னியர் சங்கம் தொடங்கப்படும் என்றும்  குருவுக்கு கோயில் கட்டப்படும்’’ என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத் தொடர்ந்து பாமகவுக்கு எதிராக நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ராமதாசுக்கு எதிராக வன்னியர் ஓட்டுக்களை பிரித்து வைத்துள்ள வேல்முருகனுடன் விஜிகேமணி தலைமையிலான ‘மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்க அமைப்பு’ இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது.

இவர்கள் பாமக போட்டியிடும் தொகுதிகளில், பாமக வேட்பாளர்களுக்கு எதிராக புதிய வேட்பாளர் களை நிறுத்தவும், பாமகவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யவும் முடிவு செய்துள்ளார்கள்.

வன்னியர் அமைப்புகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பு காரணமாக  பாமக செய்வதறியாது குழம்பி வருகிறது. அதுபோல அதிமுகவும், தங்களது வெற்றி ராமதாசால் பாதிக்கப்படுமோ என்று அஞ்சி வருகிறது….

ஏற்கனவே மெகா கூட்டணி என்று கூறி வந்த அதிமுக பாஜக கூட்டணியில், தேமுதிக உள்பட வேறு எந்த கட்சிகளும் சேர முன்வராத நிலையில், வேலியில் போன ஓணானை வேட்டியில் விட்ட கதையாக அதிமுக அலறி வருகிறது….   தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது….