சண்டிகர்: கொளுத்தும் வெயில் காரணமாக மே 14ந்தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் கோடைகாலம் தொடங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. தமிழ்நாட்டில் வேலூர் உள்பட பல பகுதிகளில் வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது. அதுபோல நாட்டில் பல பகுதிகளில் கோடை வெப்பம் மேலும் கடுமையாகி 50 டிகிரி செல்சியஸை தாண்டலாம் அதாவது 122 ° F ஐ தாண்டலாம் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தலைநகர் டெல்லி உள்பட குறிப்பிட்ட 6 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அரியானா, பஞ்சாப், டெல்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப நிலை சாதாரண வரம்புகளை விட சில புள்ளிகள் அதிகமாகவே காணப்படுகிறது. அமிர்தசரஸில் அதிகபட்ச வெப்பநிலை 42.3 டிகிரி செல்சியசும், லூதியானாவில் 43.2 டிகிரி செல்சியசும் மற்றும் ஜலந்தரில் 42.7 டிகிரி செல்சியசும் பதிவாகி உள்ளது. கொளுத்தும் வெயிலால பள்ளிக் குழந்தைகள் விரைவில் சோர்வடைந்து விடுகின்றனர். இதனால், பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை விட மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  பஞ்சாப் மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக ஆயிரக்கணக்கான பொற்றோர்களும், ஆசிரியர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு வரும் மே 14-ம் தேதி முதல் பஞ்சாபின் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளார்.